2021 ஜனவரி 23, சனிக்கிழமை

சந்தைக்கட்டிடம், பஸ் நிலையத்தின் நிர்மாணப்பணிகள் துரிதமாக முன்னெடுப்பு

Kogilavani   / 2012 டிசெம்பர் 24 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட புல்லுமலை பிரதேசத்தில் புதிய சந்தைக்கட்டிடம், மற்றும் பஸ் நிலையம் ஆகியவற்றின் நிர்மாணப்பணிகள் மழை, வெள்ளத்தினையும் தாண்டி துரிதமாக நடைபெற்று வருகின்றன.

யூ.எஸ்.எயிட் நிறுவனம் றைசன் (RISEN) எனப்படும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களின் சமூக மீழிணைப்பு மற்றும் ஸ்த்திரப்படுத்தலுக்குமான செயற்திட்டத்தின் கீழ் வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதும் நூற்றுக் கணக்கில் பாரிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதில் ஒரு பகுதியாக எதிர்வரும் நான்கு மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்ற இலக்கை நோக்கி பெரிய புல்லுமலை சந்தைக்கட்டிடத் தொகுதியும் பஸ் தரிப்பிடமும் சர்வோதய நிறுவனத்தினாலும், பெரிய புல்லுமலை கிராம அபிவிருத்தி சங்கத்தினாலும் துரிதமாக அமைக்கப்பட்டு வருகின்றன.

இதற்காக கடந்த மாதத்தில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரினால் உரிய காணிகள் பிரதேச சபைக்கு ஒதுக்கிக் கொடுக்கப்பட்டிருந்தன.
தற்போது மழை, வெள்ளம், சுழல்காற்று போன்ற இடர்களுக்கு மத்தியிலும் இவ் கட்டிட வேலைகள் கட்டிட ஒப்பந்த காரர்களால் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று இத்திட்டத்துக்கான சர்வோதய நிறுவனத்தின் ஆலோசகரும், மட்டக்களப்பு உள்ளூர் அரச சார்பற்ற
நிறுவனங்களின் இணையத்தின் உப தலைவருமாகிய வி.கமல்தாஸ் தெரிவித்தார்.

இத்திட்டத்தில் பஸ் நிலையம், சந்தைக்கட்டிடத் தொகுதி, மருத்துவ சிகிச்சை நிலையம் என்பன அமைக்கப்படவுள்ளன.

இவ்விடயம் தொடர்பாக கடந்த மே மாதம் 19ஆம் திகதி சர்வோதயத்தின் மேற்படித்திட்டத்துக்கான ஆலோசகர் வி.கமல்தாஸ் தெம்பிட்டிய புராதன ரஜமகா விகாராதிபதி மற்றும் இந்து ஆலய பரிபாலன சபையினரைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

இதன் அடிப்படையில், ஆலயங்களுக்கு வருகை தருகின்ற பக்தர்களுக்கான தங்குமிட வசதிகளை அமைத்தல், பாதிக்கப்பட்டுள்ள விநாயகர் ஆலயத்தினை அமைத்தல், கிறிஸ்தவ தேவாலயத்துக்கு வருகை தரும் யாத்திரிகர்களுக்கு தங்குமிடத்தை ஏற்படுத்தல் என பல விடயங்களுக்கு முடிவு காணப்பட்டிருந்தன.

அதேநேரம், இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அவசியத்தைப் பார்வையிடுவதற்கென ஏறாவூர் பற்று பிரதேச சபைத்தவிசாளர் வினோத், பிரதேச செயலாளர் யு.உதயசிறிதர், அபிவிருத்தித்திட்ட உத்தியோகத்தர் ஆகியோர் இப்பிரதேசங்களை பார்வையிட்டிருந்தனர்.

புல்லுமலைப் பிரதேசம், யுத்தம் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் அம்பாறை மாவட்டத்தின் எல்லைப்பிரதேசமான மகா ஓயா பிரதேசத்துக்கு அண்மையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், தமது அரசாங்கத்தின் யு.எஸ்.எயிட் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் செயற்திட்டங்களினை கடந்த மாதம் கிழக்கு மாகாணத்துக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் சிசன் பார்வையிட்டு, புல்லுமலை  மங்கள கம வீதியையும் திறந்து வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .