2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

'தமிழ் மக்களை இலங்கை அரசாங்கம் இனிமேலும் ஏமாற்ற அனுமதிக்கக் கூடாது'

Super User   / 2013 ஓகஸ்ட் 04 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

தமிழ் மக்களை இலங்கை அரசாங்கம் இனிமேலும் ஏமாற்றுவதற்கு இந்திய அரசாங்கமும் சர்வதேசமும் அனுமதிக்கக் கூடாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா துரைரெட்ணம் தெரிவித்தார்.

இலங்கை அரசின் செயற்பாடுகள் குறித்தும் அது தொடர்பான இந்திய அரசின் நிலைப்பாடுகள் குறித்தும் இன்று ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"இலங்கை தமிழர்களின் உரிமைகள் தொடர்பாக  இந்தியா, நோர்வே, அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை உட்பட உலக நாடுகள் அனைத்தும பல நடவடிக்கைகளை  முன்னெடுத்தும் கூட இலங்கை அரசு தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றது.

இதன் காரணமாகவே தமிழர் பிரச்சினை தீர்க்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் சர்வதேசமும் இலங்கை அரசாங்கத்தை அவநம்பிக்கையுடன் நோக்கவேண்டிய சூழல் ஏற்ப்பட்டிருக்கிறது. இந்த நிலைமைகளில் சர்வதேச நாடுகள் விரக்தி நிலையில் இருக்கும் போது தமிழருக்கு முதற்கட்டத் தீர்வாக முன்வைக்கப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் 13ஆவது திருத்தச் சட்டமூலம்  கொண்டுவரப்பட்ட  விடயங்களை இல்லாமல் செய்ய முயற்சித்தபோது இந்திய அரசும், சர்வதேசமும் விழிப்படைந்து இலங்கை மீது தங்களது அவதானத்தையும் கரிசனையையும் செலுத்த ஆரம்பித்துள்ளன.

இந்த அவதானங்களிலும் கரிசனைகளிலும் இந்தியாவிற்க்கான  பூகோள ரீதியானதும் இராஜரீக ரீதீயானதுமான நன்மைகள்  இருந்தாலும் அரசியல் தீர்வின்றி நிற்கும் தமிழ் மக்களுக்கு ஆரம்பத் தீர்வாக முன்வைக்கப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படுவதன் மூலம் போராட்டத்தின் இழப்புக்களில் வலிகளில் ஒரு பரிகாரமுமின்றித் தவிக்கும் தமிழ் மக்களுக்கு ஒரளவு நிம்மதியைத் தரும் எனக் கருதலாம்.

இந்த வகையில் இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு அமைய 13ஆவது திருத்தச்சட்டத்தில் வரையறுத்துக் கூறப்பட்ட அதிகாரங்களில் கனிசமான அதிகாரங்களை இலங்கை அரசாங்கம் 17ஆவது மற்றும் 19ஆவது திருத்தச் சட்டங்களில் மூலம் கபளிகரம் செய்துள்ளது.

இவற்றை மீளவும் பெற்றுக் கொள்ள வேண்டுமானால் வட மாகாண சபை ஆட்சி அதிகாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்ற வேண்டும். இதன்மூலம் மாகாண ஆட்சி முறைக்குட்பட்ட அதிகாரங்களை நிலைநாட்ட முடியும். மேலும் இலங்கை அரசுடன் பல்வேறு கட்டங்களில் இவ்விடயங்கள் தொடர்பாக வலியுறுத்தியும் இலங்கை அரசு இதனைக் கருத்தில் கொள்ளவில்லை. தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றியே வந்தது" என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--