2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

பொது பல சேனாவின் கருத்துக்கு முஸ்லிம் மக்கள் கட்சி வரவேற்பு

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 06 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

சிங்கள அரச ஊழியர்கள் தமிழ் மொழியை கற்பதை அரசு வலியுறுத்தக் கூடாது எனும் பொது பல சேனாவின் கருத்தை முஸ்லிம் மக்கள் கட்சி பெரிதும் வரவேற்பதாக அதன் தலைவர் முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'உண்மையில் சிங்கள மக்கள் தமிழ் மொழியை கற்க வேண்டும் என வலியுறுத்துவது மனிதாபிமான செயலாக தெரியவில்லை. காரணம் அவர்களில் பலர் வாழுகின்ற சூழல் தமிழ் மொழிப் புழக்கம் இல்லாததால் அவர்களுக்கு அம்மொழியை கற்பதில் பாரிய கஷ்டம் இருப்பதை காண்கிறோம்.

அத்துடன் தமிழ் மொழியை சிங்களவர்கள் கற்கத் தொடங்கினால் தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களில் தமிழ் தெரிந்த சிங்களவர்களை அரசாங்கம் நியமிக்க முயற்சி செய்யும். இதன் காரணமாக தமிழ் பேசும் மக்கள் அரச கருமங்களில் இணைய முடியாத நிலை ஏற்படும்.

இதனால்  சிங்கள மக்கள் அரச அதிபர்களாக, பிரதேச செயலாளர்களாக நியமிக்கப்படும் போது அதனை தமிழ் பேசும் மக்கள் எதிர்த்தால் அந்த சிங்களவாதிகளும் தமிழ் தெரிந்த தமிழ் பேசுவோரே என அரசாங்கம் நியாயம் பேசும்.

இன்றைய நிலையில் பல பொலிஸ் நிலையங்களில் தமிழ் தெரிந்த பொலிஸார் தேவை என்பதற்காக தமிழ், முஸ்லிம் பொலிஸார் அதிகமாக நியமிக்கப்படுவதை காண்கிறோம். சிங்களவர்கள் தமிழ் படித்தால் இந்த இடங்களையும் அவர்களைக் கொண்டே நிரப்ப அரசு முயற்சி எடுக்கும்.

அதே போல் முஸ்லிம் மக்களுக்கான பல தொழில் வாய்ப்புக்கள் என்பன அவர்கள் மும்மொழியும் தெரி;ந்தவர்கள் என்பதே மேலதிக அவர்களுக்கு தகுதியாக காணப்படுவதால் அதிகம் தொழில் வாய்ப்புக்கள் பெறக்கூடியதாக உள்ளது. ஆனால் சிங்களவர்கள் தமிழ் கற்றால் முஸ்லிம்களின் தொழில் வாய்ப்புக்களில் பாதிப்பு ஏற்படும்.

ஆகவே சிங்கள மக்களை சிங்களம் மட்டும் தெரிந்தவர்களாகவே  இருக்க விடுவதுதான் அவர்களை இந்த நாட்டுக்குள்ளேயே குறிப்பிட்ட வரையறைக்குள் வாழ்வதற்கு வழி விட முடியும். இதைத்தான் பொது பல சேனாவும் விரும்புவது போல் தெரிகிறது.

அந்த வகையில் சிங்கள மக்கள், குறிப்பாக சிங்கள அரச ஊழியர்கள் தமிழ் கற்க வேண்டும் என்ற சட்டத்தை அரசாங்கம் வாபஸ் பெற வேண்டும் என்பதை நாம் ஆதரிக்கின்றோம். இதனை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்த வேண்டும் என்றும் நாம் கோரிக்கை விடுக்கின்றோம். 

அதே போல் தமிழ் பேசும் அரச ஊழியர்களுக்கும் சிங்களம் விருப்ப மொழியாகவே இருக்க வேண்டுமே தவிர கட்டாய மொழியாக இருக்கக்கூடாது என்பதையும் முஸ்லிம் மக்கள் கட்சி வலியுறுத்துகிறது' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--