2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

இறால் வளர்ப்புக்காக குத்தகைக்கு காணி வழங்குவதை நிறுத்தக் கோரிக்கை

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 25 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அனாம்,வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேசத்தில் இறால் வளர்ப்பு நடவடிக்கைக்காக குத்தகைக்கு காணி வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன்  கோரியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸுக்கு புதன்கிழமை (23) அனுப்பிவைத்துள்ள மகஜரிலேயே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அம்மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சில பகுதிகளுக்கு மக்கள் சந்திப்புக்காக அண்மையில் நான் சென்றிருந்தேன். இதன்போது  காவேரிகுளம் உட்பட பல பகுதிகளிலுள்ள  மக்கள் விவசாயம் செய்து தங்களது வாழ்வாதாரத்தை நடத்தும் நிலையில், தங்களது விவசாயத்தை பாதிக்கும் வகையில் சில அரசாங்க அரசியல்வாதிகளுக்கு குத்தகைக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் இறால் வளர்ப்பு என்ற ரீதியில்; வழங்குவதாகவும் இது சார்பாக தங்கள் யாருக்கும் தெரியாமலே இந்நடவடிக்கை நடைபெற்றுள்ளதாகவும் தங்களின் வேதனையை தெரிவித்தனர்.

அத்தோடு, இது தங்களுக்கு மேற்கொள்ளப்படும் பெரும் அநீதி எனவும் குறிப்பிட்டனர். ஒருவர் 2,500 ஏக்கர் காணி இதற்கு பெறுவதாகவும் குறிப்பிட்டார். எனவே மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அங்கு விவசாயிகளுக்கான குளங்கள் அமைக்கப்பட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது விவசாய தொழிலை விருத்தி செய்து வரும் இவ்வேளை, இவற்றை பாதிக்கும் வகையிலும் அவர்களின் பாரம்பரிய தொழிலான விவசாயத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் மேற்கொள்ளப்படும் இறால் வளர்ப்பு திட்டத்திற்காக குத்தகைக்கு காணி வழங்கும் திட்டத்தை தயவுசெய்து நிறுத்தி உதவுமாறு வேண்டுகிறேன். தங்களது நடவடிக்கை சார்பாக  பதிலை எதிர்பார்க்கின்றேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரதிகள் பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர், காணி அமைச்சின் செயலாளர், வாகரை பிரதேச அபிவிருத்திக்குழு தவிசாளர், வாகரை பிரதேச செயலாளர், வாகரை பிரதேச சபை செயலாளர்,  தட்டுமுனை, ஊரியன்கட்டு கிராம அபிவிருத்திச் சங்கங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .