2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

ஏறாவூரில் குழாய்நீர் பெறுமாறு அறிவுறுத்தல்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 04 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஏறாவூரில் நிலத்தடி நீர் மாசடைந்து வருவதால், குடியிருப்பாளர்கள் தேசிய நீர்வழங்கல் மூலம் குழாய்நீர் இணைப்பை  பெற்றுக்கொள்ளுமாறு சுகாதாரப் பகுதியினர் அறிவுறுத்தியுள்ளனர்.

ஏறாவூர் நகரப் பிரதேசத்தில் சன அடர்த்தி காரணமாக அங்குள்ள பெரும்பாலான கிணறுகளில்; நீர் மாசுடையும்; நிலைக்கு வந்துள்ளது.

நெருக்கமாக வீடுகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அனுமதிக்கப்பட்ட தூரத்திற்கு குறைவாக குறுகிய பகுதிக்குள் மலசலகூடக் குழிகளும் கிணறுகளும் அமைந்துள்ளன. இதனால், நிலத்தடி நீர் விரைவாக மாசடைந்து வருகின்றது என ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.

எனவே, சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு குடியிருப்பாளர்கள் தேசிய நீர்வழங்கல் மூலம் குழாய்நீர் இணைப்பை பெற்றுக்கொள்வது சாலச் சிறந்தது எனவும்  அவர் கூறினார்.

ஏறாவூர் நகர பிரதேசத்தில் சுமார் ஒன்பதாயிரம் கிணறுகள் நிலத்தடி நீரைப் பெற்றுக்கொள்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன.

இதேவேளை மட்டக்களப்பு பூச்சியியல் நிபுணர்களின் ஆய்வின்படி, கிணறுகளும் அடி பைப் எனப்படும் நிலத்தடி நீரைப் பெற்றுக்கொள்வதற்காக அமைத்துக் கொடுக்கப்படும் அழுத்தப் பம்பிகளும் டெங்கு நுளம்புகள் பெருவதற்குரிய  இடமாக இருப்பதாக அறிக்கையிடப்பட்டுள்ளது என்றும் வைத்திய அத்தியட்சகர்  எம்.எச்.எம்.தாரிக் கூறினார்.

ஏறாவூர் நகரப் பிரதேசத்திலிருந்து டெங்கு நுளம்புகள் உற்பத்தியாவதை தடுக்கவும் குடியிருப்பாளர்கள் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்வதற்கு வசதியாகவும் மக்களுக்கு குழாய்நீர் இணைப்பைப் பெற்றுக்கொடுப்பதற்காக நிறுவனங்கள் உதவ வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இதன் மூலம் டெங்கு நுளம்பு உற்பத்தியாவதைத் தடுத்துக்கொள்ள வழியேற்படுவதோடு, மக்கள் தூய்மையான நீரைப் பருகவும் வாய்ப்புக்கிட்டும்.
அத்துடன் நிலத்தடி நீரைப் பெற்றுக்கொடுப்பதற்காக அமைத்துக் கொடுக்கப்படும் அடி பைப்புகள் நிலத்தின் அதி ஆழம் வரைக்கும் பதிக்கப்பட்டுள்ளன. இதனால் செறிவு கூடிய கனியுப்புக்கள் அடங்கிய கடினமான நீர் கிடைக்கின்றது.

மேலும், இந்த வகையில் அமைக்கப்படும் அடிபைப்புக்களில் அழுக்கடைந்த நீரும் சில சமயங்களில் புழுக்களும் கூட வெளிவருவதாக பொதுமக்கள் கூறுகின்றார்கள்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .