2021 மே 08, சனிக்கிழமை

'உரிமைகளை கௌரவிக்கிற புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கவேண்டும்'

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 04 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

அரசியல் தீர்க்கதரிசனம், பரஸ்பர புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்புகள் ஆகியவற்றுடன் செயலாற்றும் பதவிகளுக்கு போட்டியிடாத, ஓர் இனத்தை மற்ற இனம் மதிக்கின்ற, உரிமைகளை கௌரவிக்கின்ற ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை நாம் உருவாக்கவேண்டும் என்று கிழக்கு மாகாண பெண்கள் கூட்டணி தெரிவித்தது.

'அரசியல் ஞானத்துடன் மக்கள் நலனை முன்னிறுத்திச் செயற்படுங்கள்' என்ற விழிப்புடன், சமூகச் செயற்பாட்டார்கள், பெண் உரிமைவாதிகள், கல்வியாளர்கள், சமூக நிறுவனங்கள் உள்ளிட்ட கிழக்கின் பெண்கள் கூட்டணி செவ்வாய்க்கிழமை (03) அறிக்கை விடுத்தது.

இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'சமீப காலமாக கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் பதவி தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடந்தன என்றும் அவற்றில் எத்தகைய இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என்றும்; பத்திரிகை வாயிலாக அறிகின்றோம். முதலமைச்சர் பதவி தமிழருக்கா, முஸ்லிம்களுக்கா என்ற இழுபறிநிலை ஏற்பட்டுள்ளதை அவதானிக்கிறோம்.

நீண்டகாலத்தின் பின் இலங்கை மக்கள் தமது வாக்குப்பலத்தால் மக்களின் நல்வாழ்வுக்கு சாதமாக அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள தருணம் இது. கிழக்கில் இனத்துவ ரீதியில் குறிப்பாக தமிழர், முஸ்லிம் என்று பிளவுபடுத்தப்பட்டிருந்த மக்களுக்கிடையில் இயல்பான ஒத்த கருத்தும் நல்லாட்சிக்கான நாட்டமும் இருந்ததை தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன.
இத்தகைய தன்னெழுச்சியான சுயசிந்தனை, சுயமான செயல், ஒற்றுமை என்பவை பிரக்ஞை ரீதியாக கவனத்துடன் நிதானமாக பேணி நிலைநிறுத்தப்படுவது முக்கிய தேவையாகும். இல்லாவிடின், இதற்கு பல்வேறு பக்கங்களிலிருந்தும் ஆபத்து ஏற்படும்.

கிழக்கில் முஸ்லிம்களும் தமிழரும் பிரிந்துநின்று சண்டை இட்டதால் ஏற்பட்ட இழப்புகளை  எவரும் மறுக்கமுடியாது.  இரு இனத்தவருமே தமது சொந்தங்களை இழந்தனர். நிலங்களை இழந்தனர். வாழிடங்களிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர். கண்ணுக்குக்கண்ணான பிள்ளைகளை இழந்த முஸ்லிம், தமிழ் அன்னையர்களை நாம் ஒன்றாக பல இடங்களிலும் காண்கிறோம்.

இரு இனங்களும் ஒற்றுமையாக கிழக்கு மாகாணசபையை அதற்குரிய அதிகாரங்களுடனும் பொறுப்புகளுடனும் நன்கு இயங்கச் செய்யவேண்டும்.  அதனால், கிழக்கு பெறக்கூடிய நன்மைகள் அதிகம். கிழக்குவாழ் மக்கள், வாக்காளர்களில் ஒரு பகுதியினர், பல்வேறு பாரிய இழப்புகளை எதிர்கொண்ட பெண்கள் என்ற வகையில் அபூர்வமாக ஏற்பட்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தை குறுகிய அரசியல் நலன்களுக்காக இழக்கக்கூடாது என்று அழுத்திச் சொல்கிறோம்.

புதிய மாற்றம் எம்முள்ளிருந்து வரவேண்டும்.  ஒருவருக்கு ஒருவர் மதிப்பளித்து, ஏற்பட்ட இழப்புகளை அங்கிகரித்து, அவற்றிலிருந்து மீள முயற்சித்து நல்லிணக்கத்துடன் சுமுகமான உறவையும் சுபீட்சமான எதிர்காலத்தையும் கிழக்குவாழ்  மக்களும் பெறவேண்டும். எமது எதிர்கால சந்ததிக்கு அதை கையளிக்கவேண்டும். வரலாற்றிலிருந்து கற்றவற்றை, இன்று வரலாறு எமக்கு அளித்;துள்ள புதிய  சந்தர்ப்பத்தில் பயன்படுத்துவோம். இல்லாவிடின், வரலாற்றை தவறவிட்டவர்கள் ஆவோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X