2021 மே 08, சனிக்கிழமை

கிழக்கு முதலமைச்சர் விவகாரம்; எஞ்சிய காலத்தை பகிர்ந்தளிக்க பசீர் கோரிக்கை

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 05 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் விவகாரம் தொடர்பில் மாகாணசபையில் எஞ்சியுள்ள  இரண்டரை வருட ஆட்சிக்காலப்பகுதியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் ஒரு வருடம், ஒன்றரை வருடமென்று இரண்டாக வகுத்து தீர்வு காண்பது இரு சமூகங்களுக்கிடையிலும்; சுமுக நிலையை ஏற்படுத்துமென்று  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும்; ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும்; புதன்கிழமை (4) எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'மத்திய அரசில் மாற்றம்வேண்டி புதிய அரசாங்கம் உருவான பின்னர், கிழக்கு மாகாணசபையிலும் ஆட்சி மாற்றம் வேண்டுமென்று தமிழ், முஸ்லிம் கட்சிகள் விரும்புவதை காணமுடிகிறது. இந்த விருப்பத்தின் பிரதான வாதமாக தமிழ் முதலமைச்சர் வேண்டுமென்று பிரதான தமிழ் கட்சியும் முஸ்லிம் முதலமைச்சர் வேண்டுமென்று பிரதான முஸ்லிம் கட்சியும் கோருகின்றன.

தமிழ், முஸ்லிம் மக்களுடைய அரசியல் அபிலாஷைகள் இன்னும் நிறைவேறவில்லை. இந்தச் சூழ்நிலையில் தமிழ் தேசிய போராட்டங்களும் முஸ்லிம் தேசிய அரசியலும் யதார்த்தமாகவே தமது இறுதி குறிக்கோளை அடைந்துகொள்வதற்கு இரண்டு சிறுபான்மை இனங்களுக்குமிடையில் ஒற்றுமையும் உடன்பாடும் அவசியமாகும். கடந்தகாலத்தில் இவ்விரு சமூகங்களுக்கிடையிலும் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட முரண்பாடுகளும் கலவரங்களும் இனப்பிரச்சினை தீர்விலும் உரிமைகளை வென்றெடுப்பதிலும் எத்துணை தடைக்கற்களாக இருந்தனவென்பதை வரலாறு நிரூபித்துள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தொடர்பில் தமிழ் - முஸ்லிம் ஆகிய இரு தரப்புகளும் பல நாட்களாக அதிக பரப்புரைகளை செய்துவருவது துரதிஷ்டவசமானது. யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் ஆரோக்கியமாக வளர்க்கப்பட்டுவந்த தமிழ் - முஸ்லிம் உறவுக்கு இந்த பரப்புரைகளினால் பாதகம் ஏற்பட்டுள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை அடையும் ஒரு தரப்பின் இனத்துக்கு இப்பதவி மூலம் கிடைக்கும் அனுகூலங்களை விட, இப்பதவிப் பிரச்சினையால் தமிழ் - முஸ்லிம் மக்களுக்கு ஏற்படக்கூடிய பிரதிகூலங்களே அதிகமாக இருக்குமென்பதுடன், இது தொடர்ந்தும் மோசமான பிரிவினையையும் முரண்பாடுகளையும் இரு இனங்களுக்கிடையிலும் ஏற்படுத்தக்கூடுமென்றும்; நான் அஞ்சுகிறேன்.

இரு தரப்பும் கோரும் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி குறித்த பரப்புரைகள் தத்தமது மக்களின் உரிமையும் அவர்களின் அபிலாஷையுமே என்பதாக கட்டமைக்கப்படுகிறது. ஆனால், இக்கோரிக்கையின் உள்ளுண்மை யாதெனில், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகளுக்கே தேவைப்படுகிறது என்பதாகும்.

2008ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை தமிழரும் முதலமைச்சராக இருந்துள்ளார்.  முஸ்லிமும் முதலமைச்சராக இருந்துள்ளார். இரண்டு சமூகங்களையும் சேர்ந்த சி.சந்திரகாந்தன், நஜீப் ஏ.மஜீத் ஆகியோர் தத்தம் இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி முதலமைச்சர் பதவியை வகித்துள்ளனர். சி.சந்திரகாந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்தவர் இல்லையென்பதால், அவர் தமிழர் அல்லவென்றோ, அதேபோல் நஜீப் ஏ.மஜீத் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்தவர் இல்லையென்பதால் அவர் முஸ்லிம் அல்லவென்றோ ஆகாது.  உரிமை கோரும் இரண்டு இனங்களையும் சேர்ந்தவர்கள் முதலமைச்சர் பதவி வகித்துள்ளனர்.

ஆயினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  கட்சிகள்; கிழக்கிலுள்ள ஆதரவுத்தளத்தின் அடிப்படையிலும் இனவிகிதாசாரச் செறிவின் அடிப்படையிலும் முதலமைச்சர் பதவியை பெறுவதற்கான தகுதியை கொண்டுள்ளன.

இவ்விரு கட்சிகளும் பரஸ்பர புரிந்துணர்வின் அடிப்படையில் கிழக்கு மாகாணசபையில் எஞ்சியுள்ள இரண்டரை வருட ஆட்சிக்காலப்பகுதியை ஒரு வருடம், ஒன்றரை வருடமென்று இரண்டாக வகுத்து, முதல் ஒருவருட பதவிக்காலத்தை வகிக்க விரும்பும் கட்சி முதலிலும் ஒன்றரைவருட பதவிக்காலத்தை வகிக்க விரும்பும் கட்சி இரண்டாவதாகவும் முதலமைச்சர் பதவியை ஏற்க முன்வந்து இரு சமூகங்களுக்கிடையில் சுமுகநிலையை ஏற்படுத்துவதற்கு முன்வருமாறு கோருகின்றேன்.  

முஸ்லிம் கட்சியை மாத்திரமன்றி, அதற்கு முன்பு தமிழ்க்; கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்தி செயற்பட்டவன் என்ற பின்புலத்திலிருந்து, இரண்டு சமூகங்களின் பரஸ்பர நல்லுறவின் அவசியத்தை உணர்ந்தவன் என்ற அடிப்படையில் இக்கோரிக்கையை விடுக்கிறேன்.  இவ்வகையிலான புரிந்துணர்வு மிக்க உடன்பாடு எட்டப்படும் பட்சத்தில், இதுவே அடுத்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து போட்டியிடுவதற்கான முன்னோட்ட நடவடிக்கையாக அமையுமென்பதை சுட்டிக்காட்டுகிறேன்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X