2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

வாகரையில் 233ஆம் படைப்பிரிவு அமைந்துள்ள காணியை உரியவர்களிடம் வழங்க வேண்டும்: யோகேஸ்வரன் எம்.பி.

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 11 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேசத்தில் 233ஆம் படைப்பிரிவு இராணுவ முகாம் அமைந்துள்ள காணியானது, சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள   50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்த பொதுமக்களின் காணியாகும். இக்காணிகளை உரியவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஜனாதிபதிக்கு மகஜரொன்றை அனுப்பியுள்ளார்.

அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

233ஆம் படைப்பிரிவு இராணுவ முகாம் அமைந்துள்ள காணி உரிமையாளர்கள் சுனாமியால் பாதிக்கப்பட்ட நிலையில் ஊரியங்கட்டுக் கிராமத்தில் 15 பேர்ச் என்ற அடிப்படையில் அம்மக்களுக்கு காணி வழங்கப்பட்டு தொண்டர் நிறுவனம் மூலம் வீடுகளும் கட்டிக்கொடுக்கப்பட்டன. இவர்கள் வசித்து வந்த படை முகாம் அமைந்துள்ள இக்காணியினை இராணுவத்தினர் பெற முயற்சிக்கின்றனா.; இந்த நிலையில், இக்காணிகளை உரியவர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது ஊரியங்கட்டுக் கிராமத்தில் வாழ்ந்து வரும்  இம்மக்களின் தொழில் மீன்பிடித் தொழிலாகும். தற்போது இராணுவம் முகாம் அமைந்துள்ள பகுதியில் ஒருவருக்கு அரை ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளே முன்பிருந்தது. இக்காணியையே எதிர்காலத்தில் தங்களது பிள்ளைகளுக்கு பகிர்ந்தளித்து காணி வழங்க இக்குடும்பங்கள் திட்டமிட்டிருந்தன. அதுமட்டுமின்றி இக்காணிப் பகுதியில் இவர்கள் வசித்தாலே கடற்றொழிலை இலகுவாக மேற்கொள்ள முடியும்.

ஆனால், தற்போது இம்மக்களின்  காணியிலுள்ள இராணுவ உயரதிகாரிகளை அழைத்து இவர்களது காணிகளை தங்கள் இராணுவ முகாமிற்கு வழங்குமாறும் இதற்கான சம்மதக் கடிதம் தருமாறும் கேட்டுள்ளனர். முன்பும் இவ்வாறான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். இக்காணிக்கு நஷ்டஈடு வழங்குவதாகவும் கூறியுள்ளனர். பயத்தின் நிமிர்த்தம் ஒரு சிலர் முன்பும் தற்போதும் கையொப்பமிட்ட சம்மதக் கடிதம் வழங்கினாலும் தமது தொழில், தமது பிள்ளைகளின் எதிர்காலம் என்பவற்றை கருதி தங்களுக்கு இக்காணியை பெற்றுத் தருமாறு என்னிடம் முறையிட்டுள்ளனர்.

உண்மையிலே தற்போது நாட்டில் யுத்தம் ஓய்ந்து அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்ட நிலையில் இராணுவ முகாம்கள் மக்கள் காணிகளில் தொடர்ந்தும் நிலைகொண்டிருப்பது பொருத்தமற்றது என்பதை தாங்கள் நன்கறிவீர்களென நான் கருதுகின்றேன்.
ஆகவே, இம்மக்களிடம் அவர்களது காணிகளை கையளித்து இராணுவ முகாமை இவ்விடத்திலிருந்து நீக்கி உதவுமாறு அன்பாக வேண்டுகின்றேன். பதிலை எதிர்பார்க்கின்றேன் என்று அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .