2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

300 கி.மி தூரத்திற்கு மின் வேலி அமைக்க நடவடிக்கை

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 03 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைகளின் தாக்கத்திற்குள்ளாகும் பிரதேசங்களை பாதகாப்பதற்காக 300 கிலோமீற்றர் தூரத்திற்கு மின்வேலி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.எடி.ரத்ணாயக்க தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற உயர் மட்டக் கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

'மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைகளின் அச்சுறுத்தலுக்குள்ளாகும் பிரதேசங்களை பாதுகாப்பதற்காக 300 கிலோமீற்றர் தூரத்திற்கு மின்வேலி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்காக 150 மில்லியன் ரூபா செலவு செய்யப்படவுள்ளது. ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கு மின்வேலி அமைப்பதற்காக ஐந்து இலட்சம் ரூபா நிதிசெலவு செய்யப்படவேண்டியுள்ளது.

மூன்று அல்லது நான்கு வருடங்களில் இந்த மின் வேலி அமைக்கும் பணி பூர்த்தி செய்யப்படும்.

இதன்மூலம். மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைகளின் அச்சுறுத்தலில் இருந்து பெறுமதியான மனித உயிர்களையும், விவசாய நிலங்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இது தொடர்பான திட்டங்கள் தயாரிக்கபட்டு வருகின்றன. தற்போது அம்பாறை மாவட்டத்தின் எல்லைப்பிரதேசமான புத்தாகம பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் புல்லுமலை வரையிலான பகுதியில் மின்வேலி அமைக்கப்பட்டுள்ள போதிலும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டதாக இல்லை.

இந்த மின் வேலியை தொடர்பு படுத்தி புத்தாகமயிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் வடமுனை வரை மின்வேலி அமைப்பதன் மூலம் இதற்கான தீர்வினை பெற்றுக் கொள்ளமுடியும்.

கடந்த 30வருட யுத்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பிரதேசங்களில் மக்கள் குடியிருக்காமல் விட்டதாலும், அப்பிரதேசங்களிலுள்ள விவசாய நிலங்களில் மக்கள் விவசாயம் செய்யாததாலும் யானைகள் வசிப்பதற்கு உகந்த இடங்களாக யானைகள் மாற்றிக் கொண்டன. இங்கு யானைகள் இலகுவாக வந்து செல்லும் இடங்களாக மாறின்.

அதன் அடிப்படையிலேயே இன்று இந்த பிரதேசங்களுக்கு யானைகள் வருவதும் அதன் தாக்கம் ஏற்படுவதும் இதற்கான பிரதான காரணமாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2011ஆம் ஆண்டு தொடக்கம் யானைகளின் தாக்குதலினால் உயிரிழந்த மற்றும் உடமைகள் இழந்த விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்ட ஈட்டுக் கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரதேச செயலாளர்களினால் வழங்கப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் அவர்களுக்கு நஷ்ட ஈட்டுக் கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் எஸ்.வாசுதேவன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பி.அரியநேந்திரன், உட்பட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .