2021 மார்ச் 01, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் 6,500 இற்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 04 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் 6,500 இற்கும்  மேற்பட்டவர்கள் மாற்றுத்திறனாளிகளாக உள்ளதாக அம்மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.அருள்மொழி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி  வாழைச்சேனை மற்றும்  கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுள்ள   20 குடும்பங்களுக்கு வாழ்வாதாரத் தொழிலுக்கான  உபகரணங்கள் வியாழக்கிழமை (03) வழங்கப்பட்டன. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது ஒவ்வொரு குடும்பத்துக்கும் 30,000 ரூபா பெறுமதியான உபகரணங்கள் வழங்கப்பட்டன.

ஓட்டமாவடி பதுறியா நகரில் முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எம்.ஏ.எம்.அஸ்மி தலைமையில் இதற்கான நிகழ்வு நடைபெற்றது.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

குறிப்பாக கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் 450 இற்கும்  அதிகமாகவும் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடிப் பிரதேச செயலகப் பிரிவில் 400 இற்கும் அதிகமாகவும் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இது ஒப்பீட்டளவில் பெரிய எண்ணிக்கைதான்.

பிரதேச செயலகங்கள் தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கான சங்கங்களை உருவாக்கி வருகிறோம். மாற்றுத்திறனாளிகளுக்காக பணியாற்றுகின்ற நிறுவனங்கள், தங்களது திட்டகாலம் நிறைவடைந்து செல்கின்றபோது உள்ளூரில் மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கப்பட்ட சங்கங்கங்கள் தொடர்ந்து அந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென்பதே   இதன் நோக்கமாகும்.

மாற்றுத்திறனாளிகளுக்காக அமுல்படுத்தப்படுகின்ற வேலைத்திட்டங்களின் மாதாந்த முன்னேற்ற அறிக்கையை நிறுவனங்கள் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பிவைத்தால் அது பேருதவியாக இருக்கும். வேலைத்திட்டங்களை ஒன்றிணைப்பதற்கும் உதவும்.

சுயதொழில் வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் என்று வரும்போது அரச மட்டத்தில் சமூகசேவை உத்தியோகத்தர்கள் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களிடமும் இவ்விவரங்களை பகிர்ந்துகொண்டால், அது மாற்றுத்திறனாளிகளின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் சிறந்ததொரு இணைப்பாக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

கடந்த வருடம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 530 பேருக்கு சமூகசேவைத் திணைக்களம் வாழ்வாதாரத் திட்டத்துக்கான உதவிக்கு பணம் வழங்கியிருந்தது.

கோறளைப்பற்று மத்தியில் கடந்த வருடம் 40 பேருக்கும் கோறளைப்பற்று மேற்கில் 20 பேருக்கும் தான் சமூகசேவைத் திணைக்களத்தால் வாழ்வாதார உதவிகளை வழங்க முடிந்திருக்கிறது.

இன்னும் ஏராளமானோருக்கு வாழ்வாதார உதவிகளைச் செய்ய வேண்டியுள்ளது. அரசினால் இதை முழுமையாகச் செய்ய முடியாது. இவ்விடயத்தில் முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்கா நிறுவனம் உதவுவது போன்று மாற்றுத்திறனாளிகளுக்காக வாழ்வாதாரத் திட்டங்களை அமுல்படுத்த ஏனைய நிறுவனங்களும் முன்வர வேண்டும்.

எமது சமூக சேவைத் திணைக்களத்துடன் ஒன்றிணைந்து இச்செயற்றிட்டங்களை அமுல்படுத்தினால் திட்டத்தின் பலாபலன்கள் மிகச் சிறப்பானதாக இருக்கும்.

கடந்த வருடத்தின் எமது முன்னேற்றத்தை மதிப்பீடு செய்கிறபோது, மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட வாழ்வாதாரத் திட்டங்களால் ஏறாவூர் ஓட்டமாவடி, காத்தான்குடிப் பிரதேசத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத் திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்தி முன்னேறியிருக்கின்றனர்; என்பது தெரியவந்திருக்கின்றது.

கடந்த வருடம் சமூகசேவைத் திணைக்களம் மாற்றுத்திறனாளிகளுக்காக அமுல்படுத்திய திட்டங்கள் பல்வேறு காரணங்களால் வெற்றியளிக்கவில்லை. இன்னும் விழிப்புணர்வு சகல மட்டங்களிலும் போதாமலிருப்பதே இதற்குக் காரணம்.

முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்கா நிறுவனத்தினர் தமிழ் பிரதேசங்களில் தமிழ் மக்களுக்காக ஏற்கெனவே பல திட்டங்களை வெற்றிகரமாக அமுல்படுத்தியிருக்கின்றார்கள். எனவே, இத்திட்டமும் வெற்றியளிக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது' என்றார்.

இந்நிகழ்வில் முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்கா கள அலுவலகத்தின் தலைமை நிகழ்ச்சித்திட்ட அதிகாரி பாஹிம் வகாப், சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட அதிகாரி   பஸ்லான் தாஸிம்,  திட்டத் தொடர்பாடல் உத்தியோகத்தர்  எம்.எச்.எம்.அமீர்  உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்கா நிறுவனம் வலது குறைந்தோருக்கான வாழ்வாதாரத் திட்டத்தை அமுலாக்கத் தொடங்கியுள்ளது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .