2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

’உஷாரடையும் காலம் நெருங்கி விட்டது’‪

Yuganthini   / 2017 ஜூலை 23 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

 

தேர்தலுக்காக மீண்டும் உஷாரடையும் காலம் மிக நெருங்கி வந்து விட்டது‪ என, கிராமியப் பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார்.

எதிர்வருகின்ற ஒரு சில மாதங்களில் இடம்பெறப்போகும் அரசியல் முன்னெடுப்புக்கள் பற்றி அவர், இன்று (23) இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

தொடர்ந்து அரசியல் நடப்பு முன்னெடுப்புக்கள் பற்றிக் கருத்துத் தெரிவித்த அவர்,

“கிழக்கு மாகாண சபை கலைக்கப்படுவதற்கான காலம் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அது, மணித்தியாலக் கணக்கில் இருப்பது போன்றும் தெரிகிறது. மாகாண சபை, அதன் ஆட்சிக் காலம் முடிவுறும் தினத்திலே கலைக்கப்பட வேண்டும். அது நீடிப்பதற்கான வேறு எந்த சட்ட ஏற்பாடுகளும் கிடையாது.

“அப்படி மாகாண சபையின்  ஆட்சியை நீடிப்பதாயின், நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைத் தீர்மானம் பெறப்பட வேண்டும்.

“இதில், அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கப்போகும் என்கின்ற பிரச்சினை உண்டு. மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுமா, நடத்தப்படமாட்டாதா என்கின்ற கேள்வி,  இன்னொரு தரப்பிலே, இந்த டிசெம்பர் மாதத்துக்குள் உள்ளூராட்சிச் சபைத் தேர்தலை  நடத்தி முடிக்க வேண்டும் என்று, ஐக்கிய தேசியக் கட்சி அடம்பிடிக்கிறது.

“அது பிரதேச வாரியான முறையிலே 30 விகிதமும் தொகுதி வாரியான முறையிலே  70 சதவிகிதமும் என்கின்ற அடிப்படையிலே, அந்தத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும், ஐக்கிய தேசியக் கட்சி அவசரப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

“இது இவ்வாறிருக்க அடுத்தாண்டு ஆரம்பத்தில் ஜனவரி அல்லது பெப்ரவரியிலே உள்ளூராட்சிச் சபைத் தேர்தலை நடத்தி முடித்தே தீருவோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறிக் கொண்டிருக்கின்றார்.

“ஆக ஒட்டு மொத்தத்தில், எதிர்வருகின்ற அண்மைய காலங்களில் இருந்து, கிழக்கு மாகாணத்திலும் இந்த நாட்டிலும் அதிகமதிகமாக மீண்டும் விமர்சனங்கள் கிளம்பப் போகின்றன.

“அதற்காக அரசியல்வாதிகள் ஆதரவாளர்கள், ஊடகவியலாளர்கள் என்று எல்லோருமே உஷாரடையத் தொடங்கி விட்டார்கள். எல்லோரிடமும் மாற்றம் ஒன்று வர வேண்டும் என்கின்ற எதிர்பார்ப்பு மேலோங்கி நிற்கின்றது” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .