2024 மே 01, புதன்கிழமை

‘கூட்டமைப்பில் இணைபவர்களுக்கு மரபணுப் பரிசோதனை அவசியம்’

Editorial   / 2019 பெப்ரவரி 03 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம், வா.கிருஸ்ணா

எதிர்வரும் காலங்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைபவர்களுக்கு, மரபணுப் பரிசோதனை அவசியமாகுமென, அக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மகிழூர்முனையில் பொங்கல் விழா, நேற்று (92) நடைபெற்றது.

மகிழூர்முனை சக்தி இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், புதிய அரசமைப்பைக் குழப்பும் வகையில் செயற்படும் மஹிந்தவுடன் எந்த வகையிலும் கைகோர்த்துச் செயற்பட முடியாதென்றார்.

அத்துடன், தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக கோட்டாபய நாடங்களை நடத்திவருவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், அந்த நாடகங்களைத் தமிழ் மக்கள் நம்பமாட்டர்கள் எனத் தெரிவித்தார்.

ஒக்டோபர் 26ஆம் திகதி, நாட்டின் பிரதமருக்கு எதிராக அரசியல் சதியொன்று செய்யப்பட்ட போது, பணத்துக்கு விலைபோவதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்ததாக, அவர் தெரிவித்தார்.

எனினும், கூட்டமைப்பிலிருந்து ஒருவர் பதவிக்காகச் சென்று, தன்னுடைய மரியாதையை இழந்துவிட்டார் எனவும் இவர் கடந்த காலங்களில் மஹிந்தவின் காட்டாட்சியைப் பற்றி கடுமையாக விமர்சித்து, வாக்குகளை பெற்றுக் கொண்டவராவார் எனவும் அவர் தெரிவித்தார்.

நூறுவீதம் கட்டுக்கோப்பாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இதனால் சற்று சிதைந்துவிட்டதாகத் தெரிவித்த சிறிநேசன் எம்.பி, பதவிக்கோ, பணத்துக்கோ நாம் சோரம்போனால் எங்களுக்கு வாக்களித்த மக்களை ஏமாற்றுகின்றவர்களாகவே இருக்க முடியுமெனவும் அரசியலில் நேற்று ஒரு கொள்கை, இன்றொரு கொள்கை, நாளையொரு கொள்கை என்று எங்களுடைய சுய இலாபத்துக்காக எதையும் மாற்றிக்கொள்ள முடியாதென்றார்.

எனவே, இனிவரும் காலங்களில் நினைத்தவாறு கட்சிவிட்டு கட்சி தாவுகின்ற எந்தவொரு வேட்பாளர்களையும் எங்கள் பட்டியலில் நியமிக்காது இருப்பதற்கு மரபணுப் பரிசோதனை செய்யவேண்டிய நிலமையிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்தப் பரிசோதனையில் பாய்கின்ற குணங்கள், பறக்கின்ற குணங்கள், சலுகைகளுக்கு இரையாகின்ற குணங்கள் இருக்கின்றனவா என்று பார்த்தே கட்சியில் இணைத்துக்கொண்டு செல்வதுதான் பொருத்தமாக இருக்குமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .