2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

சட்டவிரோத மணல் அகழ்வுக்கு பறிபோன உயிர்

Princiya Dixci   / 2021 ஜனவரி 24 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ், ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

 

மட்டக்களப்பு - வந்தாறுமூலை தீவுப் பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்வாளர்களால் உருவாக்கப்பட்ட குழியால், 62 வயதுடைய பேதுரு சிவராசா எனும் கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவமொன்று, நேற்று (23) மாலை இடம்பெற்றுள்ளது. 

அதேவேளை, அவரது மனைவியும் பேரப்பிள்ளைகள் இருவரும் உயிர்தப்பியுள்ளனர் என ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

சட்டவிரோத மணல் அகழ்வால் ஏற்பட்ட சுமார் 15 அடி ஆழமான நீரோடை சேற்றுக்குழியில் தவறிவிழுந்த தனது மனைவி மற்றும் பேரப்பிள்ளைகளைக் காப்பாற்ற முனைந்த மேற்படி வயோதிபர், அக்குழியில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

இதன்போது, 13 வயதுச் சிறுவனின் துணிகரமான செயல் பொதுமக்களால் மெச்சப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வந்தாறுமூலை பிரதேசத்தைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான பேதுரு சிவராசா, தனது குடும்ப உறவினர்களை அழைத்துக்கொண்டு, அண்மைக்கால வெள்ளத்தால் பெருக்கெடுத்த நீரோடையில் தூண்டிலிட்டு மீன் பிடித்துவிட்டு, வேறு பாதையால் வீடு திரும்புயுள்ளார். 

இதன்போது, வயோதிபரது மனைவி மற்றும் பேரப்பிள்ளைகளும் சேற்றுக்குழியில் விழுந்துள்ளனர். அவர்களைக் காப்பாற்ற முனைந்த வயோதிபரும் நீரில் மூழ்கியுள்ளார். அவ்வேளையில்  தாவரப் பற்றைகளைப் பிடித்து உயிர்தப்பிய 13 வயதுச் சிறுவன்,  9 வயதுடைய தனது சகோதரன் மற்றும் அம்மம்மாவையும் தலைமுடியில் பிடித்து இழுத்து காப்பாற்றியுள்ளான்.

எனினும், அப்பப்பா முற்றாக மூழ்கியதால் காப்பாற்ற முடியாதுபோயுள்ளது. 

கடந்த வருடம் இந்தப் பாதையால் பயணம் செய்த நம்பிக்கையிலேயே அவர்கள் இவ்வழியே மீண்டும் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையே சட்டவிரோத மணல் அகழ்வாளர்கள் சுமார் 5 அடி அகலமான இப்பாதையையும்  தோண்டி மணல் எடுத்துள்ளதால் அப்பாரிய குழி ஏற்பட்டுள்ளதாக அப்பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

பிரதேச திடீர் மரண விசாரணையதிகாரி எம்.எஸ்.எம். நஸிர், சம்பவ இடத்துக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டு, முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டார். 

 சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஏறாவூர்ப் பொலிஸார் மேற்கோண்டுவருகின்றனர்.

சடலம், பிசிஆர் மற்றும் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .