2024 மே 01, புதன்கிழமை

‘பிரபாகரனால் பெறமுடியாததை சம்பந்தனாலும் பெறமுடியாது’

வா.கிருஸ்ணா   / 2019 ஓகஸ்ட் 19 , பி.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழர் விடுதலைக் கூட்டணியிலுள்ள அனைத்துப் பதவிகளிலும் இருந்தும் தான் விலகியுள்ளதாகத் தெரிவித்த அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான ஞா.கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை), தமிழ் மக்களுக்கு, பிரபாகரனால் பெற்றுக்கொடுக்க முடியாத எந்தத் தீர்வையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பெற்றுக்கொடுக்க முடியாதென்றார்.

மட்டக்களப்பில் இன்று (19) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே, வெள்ளிமலை இதனைத் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது, தமிழ் மக்களுக்குத் தேவையானவற்றை எழுத்துமூலம் பெற்றுக்கொண்டே ஆதரவு வழங்கவேண்டும் எனவும் எதிர்காலத்தில் கிழக்கில் அனைத்துக் கட்சிகளையும் இணைத்து தேர்தல்களை எதிர்கொண்டு வெற்றிபெறுவோர் அமைக்கப்படும் ஆட்சியில் பங்குதாரர்களாக மாறவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

கோட்டாபய,  பசில், சஜித் என யாராக இருந்தாலும் கடந்த காலத்தைப் பொறுத்தவரையில் தமிழர்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்றுக்கொண்டதே உண்மையெனவும், அவர் இதன்போது சாடினார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிசெய்த காலத்தில், வடக்கு, கிழக்கு மாகாணங்கனில் கிறிஸ் மனிதர்கள் உலாவியதையும் வெள்ளை வான்கள் அதிகரித்திருந்ததை தமிழ் மக்கள் இன்றும் மறக்கவும் மறுக்கவும் முடியாதெனவும் அவர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் மாற்று இனத்தை வாழ வைத்து தமிழினத்த வீழ்த்த்தும் அரசியலை செய்யக்கூடாது என்ற நிலைக்குத் தான் வந்துள்ளதாகத் தெரிவித்த அவர், பிரபாகரனால் பெற்றுத் தரமுடியாத எந்த உரிமையையும் எந்தத் தமிழ்த் தலைவர்களாலும் பெற்றுத்தரமுடியாது என்பதை சம்பந்தன் ஐயா காட்டிவருகின்றார் என்றார்.

தீர்வுத்திட்டம் தொடர்பில் காலங்கள் இழுத்தடிக்கப்பட்டு, ஏமாந்து, எதிர்க்கட்சித் தலைவன் ஒருவனாக தமிழன் ஒருவன் இருக்கின்றான் என்ற பெருமையோடு வாழ்ந்தார்கள். அந்த எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் பறிகொடுத்த இனமாக தற்போது நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் எனவும், வெள்ளிமலை இதனைத் தெரிவித்தார்.

மேலும் கூறிய அவர், தான் தொடக்கத்தில் இருந்தே தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினராகவே இருப்பதாகவும் 2001ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி ஊடாகவே நாடாளுமன்றம் சென்றிருந்ததுடன், 2012ஆம் ஆண்டும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஊடாகவே மாகாண சபைக்கும் சென்றதாகவும் அக்கூட்டணியின் சிரேஷ்ட உப தலைவராகவும் மாவட்ட தலைவராகவும் இன்றுவரை இருந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். 

ஆனால், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைத்துவம் தனக்குப் பதவிகளைத் தந்து, தன்னை ஒரு பகடைக்காயாகப் பாவிக்கலாம் என்ற எண்ணத்துடன் செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், எந்தக் கட்சிக்கும் எடுப்பார் கைப்பிள்ளையாகத் தான் வாழமாட்டேன் எனவும் பதவியை வைத்து தன்னைப் பணியவைக்கமுடியாதெனவும் தெரிவித்ததுடன், தமிழர் விடுதலைக் கூட்டணியில் இனித்தான் இயங்குவதில்லையென அறிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .