1,000 நாள்களைச் சிறையில் கழித்துள்ளார்

எல்.ரி.ரி.ஈ இயக்கத்தில் இருந்தபோது சூட்டப்பட்ட “பிள்ளையான்” எனும் இயக்கப் பெயரால் அழைக்கப்படும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், 1,000 நாள்களைச் சிறையில் கழித்துள்ளாரென, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் அவரது கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று (11) புதன்கிழமையுடன் தொடர்ச்சியாக ஆயிரம் நாட்களை விளக்கமறியல் நீடிப்பின்போது, அவர் கழித்துள்ளார்.  


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்காக கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு பிரிவுக்குச் சென்றிருந்தபோது, 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதியன்று, அவர் கைது செய்யப்பட்டார்.

 
அவர் மீதான விளக்கமறியலில் நீதிமன்றத்தால் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையிலேயே, இன்றுடன் 1,000 நாள்களை அவர் சிறையில் கழித்துள்ளார்.  


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் தேசிய அமைப்பாளரான பிரதீப் மாஸ்டர் எனப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, முன்னாள் உறுப்பினரான கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவில் கடமையாற்றியதாகக் கூறப்படும் எம். கலீல் ஆகியோரும் குற்றப்புலனாய்வு துறையினரால் ஏனைய சந்தேக நபர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.   


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம், 2005ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 25ஆம் திகதியன்று மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் பிறப்பு நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்தபோது தேவாலயத்துக்குள்ளேயே வைத்து, இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில் அவரது மனைவி உட்பட சிலர் காயமடைந்தனர்.  
கிழக்கில் விடுதலைப் புலிகள் அமைப்பில் பிளவு ஏற்பட்டிருந்த கால கட்டத்தில் இந்தப் படுகொலைச் சம்பவம் நடந்திருந்தது.  


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தில் செல்வாக்கு மிக்கவராகக் கருதப்பட்ட சிவநேசத்துரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண சபைக்கான முதலாவது தேர்தலில் போட்டியிட்டு 2008 இல் முதலமைச்சராக தெரிவாகி 2012 வரை அந்தப் பதவியில் இருந்தார்.  


2012 கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இவர், மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் கிழக்கு மாகாணசபைக்குத் தெரிவாகியிருந்த போதிலும் மாகாண அமைச்சரவையில் இடம்பெறவில்லை.  


இந்தப் பின்னணியில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆலோசகர்களில் ஒருவராக பிள்ளையான் நியமனம் பெற்றிருந்தார்.  
கிழக்கில், விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்த கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான அணியினரால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டிருந்தது.  

 

  • siva Wednesday, 11 July 2018 07:29 AM

    You are a disgrace to Tamils of E P

    Reply : 0       0


1,000 நாள்களைச் சிறையில் கழித்துள்ளார்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.