2021 ஜனவரி 23, சனிக்கிழமை

’ஒத்துழைப்பு வழங்கத் தயார்’

Editorial   / 2019 நவம்பர் 25 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

புதிய அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து சிறந்த நடவடிக்கைகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தயாராக உள்ளதாக, மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதி தலைவரும், முன்னாள் அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, நாட்டில் உள்ள அனைவருக்கும் கோட்டாபய ராஜபக்‌ஷ ஒருவரே ஜனாதிபதி என்றும் அவருக்கு வாக்களித்தாலும் வாக்களிக்காவிட்டாலும் ஜனாதிபதி என்பவர் அனைவருக்கும் பொதுவானவர் என்றும் தெரிவித்தார்.

“எனவே இந்த நாட்டு மக்கள் அனைவரையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, அவருக்கு உள்ளது. அதனை அவர் சரியாக செய்வார் என எதிர்பார்க்கின்றேன்” என்றார்.

“தேர்தல் காலத்தின் போது, பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து அரசியல்வாதிகளும் நாட்டு மக்களும் செயற்படுகின்றார்கள். எந்தத் தேர்தல் வந்தாலும் இதுவே நடைமுறை” என்றுத் தெரிவித்துள்ளார்.

“ஒரு ஜனநாயக நாட்டில், மக்கள் தங்களுக்கு விரும்பியவர்களுக்கு வாக்களிக்க முடியும். தேர்தலின் பின்பு தெரிவு செய்யப்படுகின்ற ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் அனைவரும், நாட்டில் அனைவருக்குமே பொதுவாக சேவை செய்ய வேண்டும். அதுவே ஜனநாயகத்தினுடைய பன்பு.

“இந்தப் புதிய அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து நல்ல நடவடிக்கைகளுக்கும், நாங்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராக உள்ளோம்” என்றார்.

“எங்களுடைய மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பது எங்களுடைய எதிர்பார்ப்பு. அதனை யார் செய்தாலும் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளோம். ஒத்துழைப்பு வழங்கி எங்களது மக்களுக்குக் கிடைக்க வேண்டிய அனைத்தையம் பெற்றுக்கொடுப்பதே எங்களுடைய கடமையாகும்” என்றும் தெரிவித்தார்.

“மலையக மக்களைப் பொருத்தவைரயில், அவர்களுடைய சம்பள பிரச்சினை, வீட்டுப் பிரச்சினை, காணி பிரச்சினை, கல்வி, சுகாதாரம் உட்பட ஏனைய பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். எங்களுடைய காலத்தில் நாங்கள் கூடுமான வரை அவற்றை நிவர்த்தி செய்வதற்காக எங்களை அர்ப்பணித்து வேலை செய்தோம். அவை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு, இந்த மக்கள் சுபீட்சமான வாழ்க்கையை வாழ்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பாகும்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .