2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

சர்வதேச தேயிலை தினம் இம்மாதம் 15இல்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 13 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)
 
2005ஆம் ஆண்டு முதல் பெருந்தோட்டத்துறை சமூக மாமன்றத்தால் கொண்டாடப்பட்டு வரும் சர்வதேச தேயிலைதின விழா இம்முறை நுவரெலியா மாநகரத்தில் நாளைமறுதினம்   புதன்கிழமை நடைபெறவுள்ளது.

இந்தத் தேயிலைத்தினத்தினை முன்னிட்டு காலை 10.30 மணிக்கு நுவரெலியா தூய சவேரியார் ஆலய வளாகத்தில் பேரணி ஆரம்பமாகி சினிசிட்டா உள்ளக அரங்கினை வந்தடைவதோடு, உள்ளக அரங்கில் பொதுக்கூட்டமும் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, நாளை 14 ஆம் திகதி  ஹட்டன் டைன் ரெஸ்ட்டில் சர்வதேச தேயிலை தினத்தை முன்னிட்டு தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பான ஆய்வரங்கு இடம்பெறவுள்ளது. இந்த ஆய்வரங்கில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்படவுள்ளன.  

'கௌரவமான தொழிலும் வாழ்வும்' எனும் தொனிப்பொருளோடு இம்முறை கொண்டாடப்படவுள்ள சர்வதேச தேயிலைத்தின நிகழ்வுகளில் பெருந்தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறுப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக சிறப்புரைகள் ஆற்றப்படவுள்ளன. இந்த நிகழ்வுகளில் பெருந்தோட்டத்துறையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறுபட்ட சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

பெருந்தோட்டத்துறை சமூக மாமன்றத்தின் அங்கத்துவ நிறுவனங்களின் பிரதிநிதிகளான ஓ.ஏ.இராமையா, பெ.முத்துலிங்கம், மைக்கல் ஆர்.ஜோக்கிம், எஸ்.முருகையா, வீ.அந்தனீஸ், . எஸ்.கே.சந்திரசேகரன், ஏ.சி.ஆர்.ஜோன், திருமதி விஜயலெட்சுமி, திருமதி தேவபிரியா, யோகேஸ்வரி உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

உலகளாவிய ரீதியில் பெருந்தோட்ட தொழில் துறையில் வாழும் தொழிலாளர்களின் மேம்பாட்டிற்காகவும், தொழிற்துறையின் நீடித்த நிலைப்பினை உறுதிப்படுத்துவதை நோக்காக கொண்டும் 2005ஆம் ஆண்டு புதுடில்லி மாநாட்டில் டிசம்பர் 15ஆம் திகதி முதலாவது தேயிலை தினம் கொண்டாடப்பட்டது.

டெல்லி பிரகடனத்தில் 'வாழ்வதற்கான சம்பளம்' என்ற பிரதான இலக்கினை உலகில் பல பாகங்களில் வாழும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அனுபவிக்கும் நிலையினை ஏற்படுத்துவதற்கு தொடர்ந்து பரப்புரை மற்றும் பேரணிகளை வருடம் தோறும் மேற்கொண்டு வருகின்றது.
 
பெருந்தோட்டத்துறை சமூக மாமன்றம் தொழிற்சங்கங்களுடன் ஒன்றிணைந்து வருடம்தோறும் தேயிலை தினத்தினை இலங்கையில் மலையகத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் நடத்தி வந்துள்ளது. இவ்வருடத்திற்கான சர்வதேச தேயிலை தின நிகழ்வினை 'தொழில் கௌரவமும் சிறந்த வாழ்க்கைத்தரமும்' என்ற தொனிப்பொருளுடன் நுவரெலியா மாநகரில் இடம்பெறவுள்ளது.  மேலும் பெருந்தோட்டத்துறை மக்களின் எதிர்கால வாழ்க்கை மேம்பாட்டிற்காக பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து அரசுக்கும், பெருந்தோட்டக் கம்பனிகளுக்கும் ஏனைய தொடர்புபட்ட நிறுவனங்களுக்கும் அழுத்தங்களை கொடுக்கவுள்ளது. இவ்வருட சர்வதேச தேயிலைத்தினத்தில் பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்படவுள்ளன.


தோட்டத் தொழிலாளர்களின் காணி மற்றும் வீட்டுரிமையினை உறுதிப்படுத்துவதுடன் தோட்டக் குடியிருப்புகளை கிராமாக அங்கீகரித்தல். உள்ளூராட்சி மற்றும் மாகாணசபை சேவைகளை பெருந்தோட்டத்துறை மக்கள் தங்குதடையின்றி பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தல்.  பிரதான தேசிய அபிவிருத்தி திட்டங்களில் பெருந்தோட்டப் பகுதிகளையும் உள்வாங்குதல்.  அரச பொது சுகாதார சேவைகளை பெருந்தோட்ட பகுதி மக்கள் முழுமையாக அனுபவிக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தல். பெருந்தோட்டத்துறை பெண்களின் தலைமைத்துவத்திற்கு வாய்ப்பளித்தல். பெருந்தோட்டத்துறை சிறுவர் உரிமைகள் மற்றும் வாழ்க்கை மேம்பாட்டினை உறுதிசெய்தல். அரச சேவைகளை பெருந்தோட்ட மக்கள் தாய்மொழியில் பெற்றுக்கொள்வதற்கான நடைமுறைகளை ஏற்படுத்தல் என்பனவாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--