2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும்:திகாம்பரம்

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 23 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தினைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் எமது போராட்டம் எதிர்வரும் கூட்டொப்பந்தக் காலத்திலேயும் தொடருமென தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் தெரிவித்தார்.

பொகவந்தலாவை பிரதேசத்திற்குட்பட்ட குயினா, எல்டொப்ஸ், கெம்பியன், கொட்டியாக்கலை, கியூ தோட்டங்களில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது:-

'தொழிற்சங்கங்களுக்கும் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்குமிடையில் ஒவ்வொரு முறையும் மேற்கொள்ளப்படுகின்ற கூட்டொப்பந்தம் தொடர்பாக நாம் மேற்கொள்ளுகின்ற தீவிரமான போராட்டங்கள் காரணமாக ஒரு குறிப்பிட்ட தொகை சம்பளம் தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைத்து வருகின்றது.
 
எனினும் இந்தச்சம்பளம் சகல தோட்டத்தொழிலாளர்களுக்கும் முழுமையாக கிடைக்காத காரணத்தினால்  தோட்டத்தொழிலாளர்கள் பொருளாதார ரீதியில் பாதிப்படைந்து வருகின்றனர்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு வாழக்கைச்செலவுக்கேற்ப சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று நாம் போராட்டங்களை முன்னெடுக்கின்ற போதும் கூட்டொப்பந்தத் தொழிற்சங்கங்கள் தோட்டத் தொழிலாளர்களுக்குப் பாதகமாகவே செயற்பட்டு வருகின்றன.

இதனை தோட்டத்தொழிலாளர்கள் நன்கு உணர்ந்துள்ளனர். இத்தகைய தொழிற்சங்கங்களுக்கு இந்தத்தேர்தலி;ல் தோட்டத்தொழிலாளர்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.

எதிர்வரும் கூட்டொப்பந்தத்தில் தோட்டத்தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் கிடைக்க வேண்டுமானால் இந்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் அனைத்துத் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.

அவ்வாறு சந்தர்ப்பம் கிடைக்காது போனால் தொழிற்சங்க அரசியல் ரீதியாக போராடுவதற்கு கூட்டொப்பந்தத்திற்கெதிரான அமைப்புக்கள் முன்வர வேண்டும்.

இவ்வாறானதொரு நிலையில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் தொழிலாளர் நலன்சார் பிரதிநிதிகளை உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்வதில் தோட்டத்தொழிலாளர்கள் கரிசனை செலுத்த வேண்டும். பொகவந்தலாவைப் பிரதேசத்தில் மக்களுடன் என்றும் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டவர்களையே நான் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளேன்.

இவர்களை வெற்றிப்பெறச் செய்வதன் மூலம் எமது அரசியல் பிரதிநிதித்துவத்தினை தக்க வைத்துக்கொள்ளுகின்ற அதேவேளை பிரதேச அபிவிருத்தியையும் முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--