2020 நவம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

ஐ.தே.க. கட்டிய வீடுகளை உடைக்க தற்போதைய அரசு தீர்மானம்: ரவி கருணாநாயக்க எம்.பி.

Suganthini Ratnam   / 2011 ஜூலை 15 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுப்பதை விட்டிட்டு, ஐ.தே.க. அரசாங்கம் கட்டிய பல இலட்சக்கணக்கான வீடுகளை உடைப்பதற்கு தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

அக்குறணை கசாவத்தையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

ஐ.தே.க. அரசாங்கம் வீடுகள் இல்லாதவர்களுக்கு பல இலட்சக்கணக்கான வீடுகளை நிர்மாணித்துக் கொடுத்தது. தற்போதுள்ள அரசாங்கம் வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகள் நிர்மாணித்துக் கொடுப்பதை விட்டுவிட்டு நாம் கட்டிய பல இலட்சக்கணக்கான வீடுகளை உடைப்பதற்கு திட்டமிட்டுள்ளது.  கொழும்பில் மட்டும் 65,000 வீடுகள் உடைக்கப்படவுள்ளன . அதன் ஒரு தொகுதி தற்போது உடைக்கப்பட்டுள்ளன. கண்டியில் 3000 வீடுகள் உடைக்கப்படவுள்ளன.  கம்கஹாவிலும் களுத்துரையிலும் வீடுகள் உடைக்கப்படவுள்ளன.

இந்த அரசாங்கம் கிராமங்களை அபிவிருத்தி செய்வதை விட்டுவிட்டு, பாரிய அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய்களை மோசடி செய்து வருகின்றது.  சூரியவெவ விளையாட்டு அரங்கத்தை நிர்மாணிப்பதற்கு  110 கோடி ரூபாய் திட்டமிடப்பட்டிருந்தது. மூன்று தினங்களுக்குள் அது திடீரென்று 480 கோடி ரூபாவாக உயர்வடைந்தது. இது எவ்வாறு என்பது கேள்விக்குறியே. இருப்பினும் இந்த மோசடியின் அனைத்து தகவல்களையும் பெற்றுள்ளோம். கூடிய விரைவில் இந்த மோசடி அம்பலப்படுத்தப்படும்.

ஐக்கிய தேசியக் கட்சி உண்மையில் ஐக்கியமானதொரு கட்சியாகும். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கு சரிசமமான உரிமைகளை பெற்றுக்கொடுக்கின்ற கட்சியாகும். ஆனால் தற்போதைய அரசாங்கம் இவ்வாறு நடப்பதில்லை என்றார்.

கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ.ஹலீம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்,  மேல்மாகாணசபை உறுப்பினர்களான முஜிபூர் ரஹ்மான், எம்.ஜே.எம்.முஸம்மில் மத்திய மாகாணசபை உறுப்பினரகளான எம்.எஸ்.எம்.ஷாபி, எஸ்.எம்.பீ.த.அல்விஸ், லாபீர் ஹாஜியார் ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--