2021 மே 18, செவ்வாய்க்கிழமை

மலையகப் பகுதிகளில் தொடர் மழை; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 14 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

மலையகப் பகுதிகளில் பெய்து வருகின்ற அடை மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அடை மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக இந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. ஹட்டன் - கொழும்பு பிரதான பாதையில் வட்டவளை, தியகல, கினிகத்தேனை  போன்ற பகுதிகளிலேயே மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. தலவாக்கலை – பூண்டுலோயா பிரதான பாதையில் மடக்கும்புர தோட்டத்துக்கு அருகிலும் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.

அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலும் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், தியகல சந்தியில் அடிக்கடி ஏற்படுகின்ற மண்சரிவினைச் சீர்செய்வதில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நோர்வூட் பிரிவு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பொகவந்தலாவை, நோர்வூட், டிக்கோயா  போன்ற பிரதேசங்களில் பெய்து வருகின்ற அடை மழையினால் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வடைந்து வருகின்றது.

நுவரெலியா, நானுஓயா, லபுகக்கலை போன்ற பகுதிகளில்  அடிக்;கடி தோன்றுகின்ற பனிமூட்டம் காரணமாகவும் வாகனப் போக்குவரத்துகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளன.

இதேவேளையில், தலவாக்கலைக்கும் - கிரேடஸ்வெஸ்டனுக்கும் இடையிலுள்ள ரயில் பாதையில் கற்பாறைகள் உருண்டு விழுந்ததில் மலையகப்பகுதி ரயில் போக்குவரத்தகளுக்குப் பாதிப்பேற்பட்டுள்ளது.  இதனால் ரயில் போக்குவரத்துக்கள் தலவாக்கலை ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்ச்சியான மழை வீழ்ச்சியினால் தோட்டத்தொழிலாளர்கள் பெரும் சிரமத்துக்கு மத்தியில் தொழில் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதுடன்,  மலையகப்பகுதி பாடசாலைகளின் மாணவர் வருகையும் கடந்த சில நாட்களாக குறைவடைந்துள்ளதாக பாடசாலை அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .