2021 மே 06, வியாழக்கிழமை

அடிக்கல் நாட்ட வருமாறு மோடிக்கு அழைப்பு

George   / 2015 பெப்ரவரி 01 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அரசின் உதவியுடன் மலையகத்தில் அமைக்கப்படவுள்ள வீடமைப்பு திட்டத்தின் ஒரு தொகுதிக்கான அடிக்கல்லை இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நேரடியாக மலையகத்துக்கு விஜயம் செய்து நாட்டிட வேண்டும் என்ற அழைப்பை தாம் கூட்டாக விடுத்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.


இந்திய தூதுவர் வை.கே.சின்ஹா உடன் இந்திய தூதகத்தில் நேற்று சனிக்கிழமை(31) மாலை இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.


கடந்த சுமார் மூன்று ஆண்டுகளாக இழுபறி நிலையில் இருந்த இந்திய அரசின் உதவியுடனான மலையக வீடமைப்பு திட்டம், எதிர்வரும் காலங்களில் செவ்வனே நடைபெற,   நாம் கட்சி பேதங்களுக்கு அப்பால் சென்று கூட்டாக இந்திய அரசுடன் இணைந்து செயற்பட உள்ளோம் என்ற உறுதி மொழியை நாம் இந்திய தூதுவருக்கு வழங்கினோம்.


இதன் அடையாளமாக, இந்திய அரசின் உதவியுடன் மலையகத்தில் நிறைவேற்றப்படவுள்ள இந்த வீடமைப்பு திட்டத்தின் ஒரு தொகுதிக்கான அடிக்கல்லை இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக மலையகத்துக்கு விஜயம் செய்து நாட்டிட வேண்டும் என்ற அழைப்பை நாம் கூட்டாக விடுத்துள்ளோம்.


இதை இலங்கை வரும் பிரதமரின் நிகழ்ச்சிநிரலில் இணைத்துக்கொள்ள ஆக்கபூர்வமான முழு முயற்சி செய்வதாக இந்திய தூதுவர் வை.கே. சின்ஹா எமக்கு உறுதியளித்துள்ளார்.


இன்றைய புதிய அரசில் மலையகத்துக்கு அமைச்சரவையிலும், ராஜாங்க அமைச்சர் பட்டியலிலும் கிடைத்துள்ள பதவிகள், மலையக தோட்ட தொழிலாளர்களின் வீடமைப்பு பிரச்சினைக்கு தீர்வை பெற்று தரும் அடிப்படையில் அமைந்துள்ளன.
பெருந்தோட்ட ராஜாங்க அமைச்சின் மூலமாக விடுவிக்கப்படும் காணிகளில், உட்கட்டமைப்பு அமைச்சின் மூலமாக வீடுகள் கட்டப்படும். கடந்த காலங்களில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மூலமாக இழுபறி நிலையில் கொண்டு செல்லப்பட்ட இந்த திட்டம் தடையின்றி முன்னெடுக்கப்பட ராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணனும் முழு ஒத்துழைப்பை நல்குவார்.


எனவே இனி இந்த திட்டம் முன்னெடுக்கப்பட எந்தவித தங்கு தடையும் கிடையாது. அரசியல் பேதங்களை மறந்து இந்த நல்ல காரியத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.


அத்துடன், இந்திய அரசின் வீடமைப்பு திட்ட வீடுகளை பெறவுள்ள பயனாளிகளை தெரிவு செய்வதில், இந்திய தூதரகம் முன்னெடுக்கும் விதிமுறைகளை நாம் ஏற்றுக்கொண்டுளோம். இதன்மூலம் எந்த வித கட்சி, சங்க பேதங்களுக்கு அப்பாற்பட்ட முறையில் பயனாளிகள் தெரிவு செய்யப்படுவார்கள்.


நமது அரசாங்கத்தின் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையான லயன் வீடுகளை ஒழித்து தனி வீடுகளை கட்டித்தரும் நிலைபாட்டுக்கு, இந்திய வீடமைப்பு திட்டம் பேருதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


இதன்மூலம்  மலையக பாட்டாளி வர்க்கம் ஒரு கிராமிய சூழலில் நிரந்த சுதந்திர வாழ்க்கையை மலைநாட்டில் வாழும் எதிர்காலத்தை நாம் கூட்டாக உருவாக்குவோம் என இந்த அறிக்கையில் மனோ மேலும் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .