2021 மே 08, சனிக்கிழமை

கல்வி அமைச்சின் சேவையை விரிவுப்படுத்த இணையத்தளம்

Sudharshini   / 2015 பெப்ரவரி 09 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். ஷங்கிதன்


100 நாட்கள் வேலைத்திட்டத்தை விரைவுபடுத்தும் முகமாக, இராஜாங்க கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணனின் புதிய இணையத்தள பக்கமொன்று www.radhakrishnan.org,  திங்கட்கிழமை (9) நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியில் வைத்து உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.


இந்நிகழ்வில், இராஜாங்க கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷணன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் இராதாகிருஷ்ணன்,

'ஆரம்பிக்கப்பட்டுள்ள எனது புதிய இணையத்தள பக்கத்தினூடாக ஆசிரியர்கள் தமது பிரச்சினைகளை, எனது நேரடியான கவனத்துக்கு கொண்டுவர முடியும்' என்றார்.


'என்னை நேரடியாக சந்திக்க முடியாதவர்கள், தூர இடங்களிலிருந்து வந்து தமது பணத்தையும் நேரத்தையும் வீணடிக்காமல், எமது சேவையை பெற்றுக்கொள்ளும் முகமாகவே இந்த இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனவே, இதனை முறையாக பயன்படுத்தி கொள்வீர்கள் என எதிர்பார்க்கின்றேன்'  என்றும் அவர் தெரிவித்தார்.


தொடர்ந்து உரையாற்றிய அவர்,


'மலையக பாடசாலைகளிலும் போதைப்பொருள் பாவனை இருப்பதை கடந்த கால சம்பவங்கள் எடுத்துக்காட்டியுள்ளன. போதைப்பொருள் விற்பனையில் ஈடுப்பட்டுள்ளவர்களை பொலிஸார் கைதுசெய்து வருகின்றனர். எனவே, இந்த விடயத்தில் பெற்றோர் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.


'பெற்றோர், பிள்ளைகளின் பாடசாலை விடயங்கள் தொடர்பாக அவதானமாக இருக்க வேண்டும். தற்போது பிள்ளைகள் பிழையான வழிகளில் செல்வதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளன. இன்றைய உலகின் நவீன வளர்ச்சி எமக்கு சாதகமாக இருக்கின்ற அதேவேளை, பாதகமாகவும் உள்ளன. எனவே, அதனை உணர்ந்து பெற்றோர் செயல்பட வேண்டும். தமது பிள்ளைகளின் நண்பர்கள் யார், அவர்கள் பாடசாலை முடிந்து எங்கு செல்கின்றார்கள் என்பதில் பெற்றோர் அவதானமாக இருக்க வேண்டும்.


போதைப்பொருட்கள் தொடர்பாக தகவல்கள் கிடைத்தால் அதனை உடனடியாக பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டுவர வேண்டும். பாடசாலைகளை பொறுத்த வரையில் ஆசிரியர்களால்; அனைத்து விடயங்களிலும் கவனம் செலுத்த முடியாது. எனவே அவர்களுக்கு உதவியாக பெற்றோர் செயற்பட வேண்டும்' என்றும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X