2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

4 மாணவர்கள் உயிரிழப்பு சம்பவம்: அதிபருக்குக் கட்டாய விடுமுறை

Editorial   / 2020 மார்ச் 12 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை- கோமரங்கடவல பிரதேசத்திலுள்ள குளத்தில் மூழ்கி, 4 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், பதுளை- ஹாலிஎல வித்தியாலயத்தின் அதிபருக்குக் கட்டாய விடுமுறை வழங்குவதற்கு நடவடிக்​கை எடுத்துள்ளதாக, மாகாண கல்வியமைச்சின் செயலாளர் சந்தியா அம்பவன்வல தெரிவித்தார்.

அத்துடன், பிரதி அதிபர், ஆசிரியர்கள் நால்வர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் 2 ஆசிரியர்கள் கஷ்டப் பிரதேச பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில், ஆசிரியர்களின் கவனயீனமே, இதற்குக் காரணம் என, மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனைகளை மேற்கொண்ட மரண விசாரணை அதிகாரி, நீதிமன்றத்துக்கு அறிக்கை அளித்திருந்தார்.

இந்நிலையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மேலும், மாணவர்களின் சுற்றுலாப் பயணத்தில் அதிபர் கலந்துகொள்ளாமையானது, அவர் தனது பொறுப்பிலிருந்து நேரடியாக விலகுவதாகவே எடுத்துக்கொள்ளப்படும் என்பதால், அவருக்குக் கட்டாய விடுமுறை வ​ழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன் பணிநீக்கம் செய்யப்பட்ட பிரதி அதிபர், ஆசிரியர்கள் குறித்து முன்னெடுக்கப்பட்டு வந்த ஒழுக்காற்று விசாரணைகளில் முன்வைக்கப்பட்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்​டு, எதிர்கால நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் சந்தியா அம்பன்வல தெரிவித்தார்.

பதுளை- ஹாலி பிரதேச பாடசாலையொன்றில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களும் 7 ஆசிர்களுடனான குழுவினர் பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி கல்விச் சுற்றுலாவை மேற்கொண்டிருந்தபோது, திருகோணமலைப் பகுதியிலுள்ள குளமொன்றில் குளிக்கச் சென்று நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .