2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

குளவிக்கூடுகளை அகற்ற இராணுவத்தின் உதவி

Gavitha   / 2021 ஜனவரி 26 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ், டி. சந்ரு

பெருந்தோட்டங்களிலுள்ள குளவிகளை, உயிருடன் அகற்றுவதற்கு, இராணுவத்தினரின் உதவி பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக, நுவரெலியா மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை, அபிவிருத்தியூடாக வளப்படுத்தும் செயற்குழுக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட செயலாளர் ஆர்.எம்.பி.புஷ்பகுமார தலைமையில், நுவரெலியா மாவட்ட செயலகத்தில், இன்று (26) காலை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அமைச்சர்களான மஹிந்தானந்த அலுத்கமகே, சி.பி. ரத்நாயக்க, இராஜாங்க அமைச்சர்களான ஜீவன் தொண்டமான், திலும் அமுனுகம, எஸ்.வியாழேந்திரன், பிரசன்ன ரனதுங்க, மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ.கமகே உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, பெருந்தோட்டத் தொழிலாளர்களை குளவித் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் வகையில், விசேட பாதுகாப்பு ஆடைகள் வழங்கப்படவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன்,  பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள தேயிலை மலைகளில் கூடு கட்டியுள்ள குளவிகளை, உயிருடன் அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது என்றும் இதற்காக, இராணுவத்தினரின் உதவிகளைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பெருந்தோட்ட மக்களின் அபிவிருத்தி தொடர்பில் கோரிக்கைகளை முன்வைத்திருந்தார். 

அந்தவகையில், குளவிக்கொட்டுக்கு இலக்காகி, பெருந்தோட்டப் பகுதியில். கடந்த காலங்களில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது பாரிய பிரச்சினையாக வருகின்றமையால், இதற்கான உரிய தீர்வு உடனடியாக எட்டப்படல்  வேண்டும் என, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை முன்வைத்திருந்தார்.

இதன் பின்னர், இதற்குப் பதிலளித்த, வனஜீவராசிகள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கா, தோட்டப் பகுதிகளில் குளவித் தாக்குதல் தொடர்பில், இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை வெளிப்படுத்துமாறு அதிகாரிகளை வினவினார்.

இதன்போது, குளவித் தாக்குதலில் இருந்து தொழிலாளர்களைப் பாதுகாக்க, பாதுகாப்பு ஆடைகள் தைக்கப்பட்டுள்ளது என்றும் தோட்ட நிர்வாகங்களுக்கு இவற்றை வழங்க, பொறுப்புமிக்க அதிகாரியொருவர் தேவை என்றும் தெரிவித்திருந்தனர்.

இதன் பிரகாரம், இந்த ஆடை சம்பந்தப்பட்ட பொறுப்புக்கு, மாவட்ட செயலாளரை நியமிப்பதாக, அமைச்சர் சீ.பி.ரத்நாயக்கா உறுதியளித்தார்.

இதேவேளை, மலையக பெருந்தோட்டங்களில் இந்திய அரசாங்கத்தின் நிதியினூடாக, 10 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டம் வெகு விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், இருப்பினும், இந்தத் திட்டத்தை முன்னெடுக்க, தோட்ட நிர்வாகங்கள் காணிகளை வழங்குவதில் சிக்கல் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதனால், இந்தப் பிரச்சினையை, நீதிமன்றம் வரை கொண்டு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட 7 பேர்ச் காணியும், முறையாக வழங்கப்படவில்லை என்றம் தெரிவித்திருந்தார்.

எனவே, இத்திட்டத்துக்கு தோட்ட நிர்வாகங்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் அத்துடன் வீடமைத்து சிறுவிவசாய நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் வகையில், 10 பேர்ச் காணியை வழங்குவதற்கான அனுமதியை, அமைச்சரவை ஊடாகப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை, பெருந்தோட்டப் பகுதிகளில், ஒருவர் 3 மாடுகளுக்கு மேல் வளர்க்க முன்வந்தால், அந்த நபருக்கு, விவசாய அமைச்சின் ஊடாக, நிதியுதவிகள் வழங்கப்படும் என்று, அமைச்சர் மஹிந்த அளுத்கமகே தெரிவித்தார். 

அத்துடன், தோட்டப்பகுதிகளில் மாடுகள் வளர்ப்பு, பாலுணவு உற்பத்தி, பால் பண்ணையாளர்கள் ஊக்குவிப்புக்கென, 200 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யவுள்ளதாகவும் பெருந்தோட்டங்களில் இருந்து, 1,500 பேரை தெரிவு செய்து, இதற்காக விண்ணபிக்கி முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .