2020 ஓகஸ்ட் 11, செவ்வாய்க்கிழமை

மணிப்பூர் தோட்டத்தில் இரு வீடுகள் தீக்கிரை

Editorial   / 2019 டிசெம்பர் 08 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சுஜிதா, எஸ்.கணேஸன், நீலமேகம் பிரசாந்தன்

தலவாக்கலை- வட்டகொடை யோக்ஸ்போட் தோட்டம், மணிபூர் பிரிவில், ஏழு வீடுகளைக் கொண்ட 8ஆம் இலக்க தொடர் லயன் குடியிருப்பில், இன்று (8) காலை 9.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், ஒரு வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், மற்றுமொரு வீடு பகுதியளவில் சேதமாகியுள்ளதாக, தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் இரு வீடுகளிலும் இருந்த 9 பேர், யோக்ஸ்போட் கலாசார மண்டபத்தில், தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை உறுதிசெய்யாத போதிலும் மின்கசிவின் காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என்று, பிரதேசவாசிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

தீ ஏற்பட்ட போது வீட்டிலிருந்தவர்கள் எரிவதைக் கண்டு கூச்சலிட்டனர் என்றும், அதன் பிறகு அயலவர்கள் ஓடிவந்து ஏனைய வீடுகளுக்குத் தீ பரவாமல் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தீ விபத்தில் வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், உடுதுணிகள், பாடப் புத்தகங்கள் என பெருமளவிலான பொருள்கள் தீக்கிரையாகியுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.

தீ விபத்து இடம்பெற்ற இடத்துக்கு உடனடியாக விஜயம் மேற்கொண்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணியின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாத் ஆகியோர், சம்பவத்தை நேரில் பார்வையிட்டதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பரத் அருள்சாமியின் ஊடாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் இவர்களுக்கான நிவாரண உதவிகளை, தோட்ட நிர்வாகமும் கொட்டகலை பிரதேச சபையும் இணைந்து மேற்கொண்டு வருவதாக, கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளர் ராஜமணி பிரசாத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--