2020 மே 25, திங்கட்கிழமை

ரூ. 750இல் உறுதியாகவுள்ள கம்பனிகள்; நேற்றைய பேச்சும் தோல்வி

Editorial   / 2019 பெப்ரவரி 08 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகேஸ்வரி விஜயனந்தன்

ஏற்கெனவே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு அமைவாக, 750 ரூபாய்க்கு மேற்பட்ட எந்தவொரு கொடுப்பனவையும் வழங்குவதற்குத் தயாராக இல்லையென்ற நிலைபாட்டிலேயே முதலாளிமார் சம்மேளனம் இருப்பதால், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு தொடர்பில், நேற்றைய தினம் (07) இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்​பெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், விசேட பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் (அமைச்சரவை அந்தஸ்தற்ற) வே. இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.திலகராஜ், அ.அரவிந்தகுமார், கூட்டணியின் பிரதிச் செயலாளர் சண். பிரபா ஆகியோரும், முதலாளிமார் சம்மேளனத்தின் சார்பில் லலித் ஒபேசேகர, கனிஷ்க வீரசிங்க, சுனில் போலியந்த உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

பேச்சுவார்த்தைத் தொடர்பில் கருத்துத் தெரிவித்த கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், தோட்டக் கம்பனிகள், தேயிலை கிலோகிராம் ஒன்றுக்கான கொடுப்பனவு - 25 ரூபாய் முதல் 40 ரூபாய் வரையான அதிகரிப்பைக் காரணங்காட்டி, அதில் தொழிலாளர்கள் வருமானம் ஈட்டலாமென்ற வாதத்தை முன்வைத்தனரெனச் சுட்டிக்காட்டினார்.

இதனைத் தமது தரப்பு ஏற்க மறுத்தததாகவும் மேற்படி விடயமானது, அடிப்படையில் பெருந்தோட்டத்துறை முகாமைத்துவ முறைமை மாற்றத்தினூடாக இடம்பெற வேண்டுமே தவிர, இரண்டு தொழிற்சங்கங்களுடன் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தத்தின் ஊடாகத் தீர்மானிக்க முடியாதென்றுக் கூறியதாகவும் தெரிவித்தார்.

அத்தகைய முறைமை மாற்றச் செயற்பாடுகளை, அமைச்சரவைப் பத்திரத்தினூடாக, நாடாளுமன்றத்தில் அரசாங்கம் முன்வைக்க வேண்டுமென்றும் ஏனெனில், இந்த விடயங்கள், தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களை மீறக்கூடியன என்றும் எடுத்துரைத்ததாக, அவர் தெரிவித்தார்.

தொழிலாளர்கள், தொடர்ந்தும் இன்றைய நிலையிலேயே இல்லாமல், சிறுதோட்ட உரிமையாளர்களாக உயர வேண்டுமென்பதே கூட்டணியின் நிலைபாடு என்பதையும் தெளிவுபடுத்தியதாக, அவர் கூறினார்.

பெருந்தோட்டத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர், அதனைக் கொள்கை அளவில் ஏற்றுக்கொண்ட போதும், தற்போது எழுந்துள்ள சூழலில், அரசாங்கம் தற்காலிகத் தீர்மானமெனும் தமது நிலைபாட்டில் உறுதியாக இருப்பதாகவும், அரசாங்கம் இதற்கு உறுதியான பதிலை வழங்கும் வரை, அரசாங்கத்துக்கான தமது ஆதரவை, பரிசீலனைக்கு உட்பட்டதாகவே வைத்திருக்கும் என்பதையும் தெளிவாக முன்வைத்ததாக, திலகராஜ் எம்.பி மேலும் தெரிவித்தார். Bodymatter


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X