2021 ஜனவரி 27, புதன்கிழமை

'எனது பதவிக் காலத்தில் தலையீட்டுக்கு இடமில்லை'

Princiya Dixci   / 2016 ஜூலை 09 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டு நீதி மன்றத்திற்கோ, நீதிபதிக்கோ அல்லது வேறு எந்த நிறுவனத்துக்கோ எனது நாட்டின் உள்விவகாரங்களிலும்  நீதித்துறையிலும் தலையிட இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.  

கடந்த யுத்த காலத்தில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எமக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் செய்வதற்கு வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு வருவதற்கும் அல்லது வெளிநாட்டு யுத்த நீதிமன்றங்களை எந்தவொரு இடத்திலும் எந்த வகையிலும் அமைப்பதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டாலும் தாம் ஜனாதிபதியாக பதவி வகிக்கும்வரை அதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

பாணந்துறை நகரசபை விளையாட்டரங்கில் நேற்று வெள்ளிக்கிழமை (08) பிற்பகல் இடம்பெற்ற ஸ்ரீ ராமான்ய மகா நிக்காயாவின் முக்கிய சமய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எமது நாட்டின் சுதந்திரத்துக்கும் ஆட்புல எல்லை ஒருமைப்பாட்டுக்கும் சவாலாக அமையும் வகையில் அமையும் எந்தவொரு தேசிய அல்லது சர்வதேச நடவடிக்கைக்கும் இடமளிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்த ஜனாதிபதி, தாய் நாட்டின் சுதந்திரத்துக்காக பின்நிற்கப் போவதில்லை என மகா சங்கத்தினர் முன்னிலையில் உறுதியளித்தார்.

அரசிய யாப்பில் பௌத்த சமயத்துக்குரிய இடத்தை மேலும் பலப்படுத்துவதற்கும் வளப்படுத்துவதற்கும் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் ஜனாதிபதி, மகா சங்கத்தினர் முன்னிலையில் உறுதியளித்தார்.

தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட நாட்டின் எல்லா நடவடிக்கைகளிலும் மகா சங்கத்தினரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் செயற்படுவதே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஒரு பௌத்தர் என்ற வகையிலும் அரச தலைவர் என்றவகையிலும் நாட்டின் கீர்த்திமிகு வரலாற்றுக்கு மதிப்பளித்து இலங்கைச் சமூகத்தைப் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .