2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

'நிழல் அமைச்சரவைக் கூட்டம் நடத்த சிறந்த இடம் வெலிக்கடை சிறையே'

Princiya Dixci   / 2016 ஜூலை 09 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

நிழல் அமைச்சரவைக் கூட்டம் நடத்த சிறந்த இடம் வெலிக்கடை சிறைச்சாலையே என திருகோணமலை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப், இன்று சனிக்கிழமை (09) தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,

கடந்த காலத் தேர்தல்களில் மக்களுக்கு வழங்கிய பல வாக்குறுதிகளை இன்னும் நாம் நிறைவேற்ற முடியவில்லை. எம்மைதத் திருடர்கள் எனக் கூறிய பலர் இன்று அமைச்சரவையில் உள்ளனர். இவர்களை அமைச்சரவையில் வைத்துகொண்டு எவ்வாறு நாம் திருடர்களைக் கைதுசெய்வது?

இவர்களினால் ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மக்கள் வைத்த நம்பிக்கை குறைகிறது. நாம் நினைத்தால் இன்றே தனித்து ஆட்சியமைக்க முடியும். ஆனால், ஜனாதிபதியுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்துக்கு மதிப்பளித்து, இன்றுவரை பொறுமை காக்கிறோம்.

தேசிய அரசாங்கத்தின் மூலம் நாம் பெற்றுக்கொண்டதைவிட இழந்ததே அதிகம். ஆகவே, நாடா? கட்சியா? என ஜனாதிபதி முடிவெடுக்க வேண்டும்.

எதிர்கட்சியில் உள்ளவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் இல்லாமல் நிம்மதியாக உறங்கமுடியாதுள்ளது. அதனால்தான் இன்று நிழல் அமைச்சரவை ஒன்றை உருவாக்கியுள்ளார்கள். இந்த அமைச்சரவைக் கூட்டம் நடத்த சிறந்த இடம் வெலிக்கடை சிறைச்சாலையே.

இவ்வமைச்சரவையில் வழங்கப்பட்ட அமைச்சுப் பதவிகள் அனைத்தும் நகைப்புக்குரியது.

வெளிவிவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷவாம். நீங்களே யோசித்துப்பாருங்கள். நாமல் வெளிவிவகார அமைச்சராக இருந்தால் எமது நாட்டின் நிலைமை என்னவாகும்? இங்கு ரக்பி விளையாடும்போது ஏற்படும் கருத்துமுரண்பாடுகளை விட ஐக்கிய நாடுகள் சபையில் பல மடங்கு ஏற்படும். ரக்பி போட்டிகளில் ஏற்பட்ட கருத்துமுரண்பாடுகளால் பெற்றுக்கொண்ட அனுபவத்தை அங்கும் பிரயோகித்தால்?

இந்த நிழல் அமைச்சரவையை, நிஜ அமைச்சரவையாகக் கற்பனை செய்து பார்க்கும் எவரும் இனி கூட்டு எதிர்க்கட்சிக்கு வாக்களிக்கமாட்டார்கள் எனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .