2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

பாடசாலை பதில் அதிபர்களின் நியமனத்தை நிரந்தரமாக்குமாறு கோரி நாளை போராட்டம்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 09 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அரசாங்கப் பாடசாலைகளில் பதில் அதிபர்களாக் கடமையாற்றுவோரை அவர்களின் பதவியில் நிரந்தரமாக்குமாறு கோரி கல்வி அமைச்சுக்கு முன்னால் நாளை பதில் அதிபர்கள் உண்ணாவிரதப் போராட்டமொன்றில் ஈடுபடவுள்ளதாக கிழக்கு மாகாண பதில் அதிபர்கள் சங்கத் தலைவர் ஏ.ஜி.ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இசுறுபாய, பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வியமைச்சின் முன்னால் நாளை காலை இடம்பெறவுள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கிழக்கு மாகாண பதில் அதிபர்கள் சங்கம் மற்றும் அகில இலங்கை பதில் அதிபர்கள் சங்கம் உள்ளிட்ட பதில் அதிபர்கள் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, நாடு முழுவதும் பதில் அதிபர்களாகக் கடமையாற்றுவோரை அவர்களின் பதவியில் நிரந்தரமாக்குவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதியளித்திருந்த போதும், மேற்படி உறுதி நிறைவேற்றப்படாமையினாலேயே பதில் அதிபர்கள் உண்ணாவிரத நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புதில் அதிபர்களை நிரந்தரமாக்குவது தொடர்பில் பேசப்பட்டபோது, நாட்டிலுள்ள நிதிப் பற்றாக்குறை காரணமாக பதில் அதிபர்களை நிரந்தரமாக்க முடியாதென திறைசேரியின் செயலாளர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, பதில் அதிபர்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு கூறி, ஜனாதிபதி ராஜபக்ஷ கடந்த வாரம் குழுவொன்றினை நியமித்திருந்தார். இந்தக் குழுவில், அமைச்சர்களான - மைத்திரிபால சிறிசேன, சுசில் பிரேமஜெயந்த, பந்துல குணவர்த்தன மற்றும் தினேஷ் குணவர்த்தன ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த நிலையிலேயே பதில் அதிபர்களின் உண்ணாவிரதப் போராட்டம் நாளை இடம்பெறவுள்ளது. நாடு முழுவதும் 3500 க்கும் மேற்பட்ட பதில் அதிபர்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்களில், 10 வருடங்களுக்கும் மேலாகப் பணியாற்றி வருவோரும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .