2021 மே 06, வியாழக்கிழமை

வத்தளை தமிழ்க் கலவன் பாடசாலை மூடப்படமாட்டாது: கத்தோலிக்க திருச்சபை

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 19 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

'வத்தளை, பள்ளியாவத்தை பிரதேசத்தில் இயங்கிவரும் ரோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை மூடப்பட மாட்டாது. மாறாக அப்பாடசாலை வத்தளை பிரதான வீதியிலுள்ள சுமார் 90 பேர்சஸ் காணியில் இயங்கவுள்ளது' என்று கத்தோலிக்க திருச்சபையின் கல்வி நடவடிக்கைக்குப் பொறுப்பான பொது முகாமையாளர் அருட்தந்தை ரஞ்சித் மதுராவெல - தமிழ்மிரருக்குத் தெரிவித்தார்.

குறித்த பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் வசதி ஆகியவற்றைக் கருத்திற் கொண்டே பாடசாலையை இடமாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்த அருட்தந்தை, இது தொடர்பில் பாடசாலையின் நிர்வாகம் மற்றும் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோருடன் கலந்துரையாடப்பட்டே தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் சில அரசியல் சக்திகள் இந்த நடவடிக்கையினைக் குழப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வத்தளை தொகுதியில் அமைந்துள்ள ஒரு தனித் தமிழ் பாடசாலையான வத்தளை ரோமன் கத்தோலிக்க அரசினர் தமிழ்க் கலவன் வித்தியாலயம் அமைந்திருக்கும் காணியை தந்திரமாக அபகரிப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் அதன்பொருட்டே குறித்த பாடசாலையினை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. இது தொடர்பில் கத்தோலிக்க திருச்சபையின் கல்வி நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான பொது முகாமையாளர் அருட்தந்தை ரஞ்சித் மதுராவெலவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,  'வத்தளை, ஹுனுபிட்டிய பிரதேசத்தில் நீண்ட காலமாக இயங்கி வந்த தமிழ்ப் பாடசாலையொன்று கடந்த காலத்தில் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக 1983ஆம் ஆண்டு தீக்கிரையாக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த பாடசாலையில் கல்வி கற்று வந்த மாணவர்கள் பள்ளியாவத்தையில் அமைந்திருந்த முஸ்லிம் பாடசாலையில் சேர்க்கப்பட்டு கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

பிற்காலத்தில் இந்த பாடசாலை, கத்தோலிக்க திருச்சபையினால் பொறுப்பேற்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றது. அத்துடன், பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுவதால் கல்வி நடவடிக்கைகள் இரு வேளைகளாக காலை, மாலை என முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதனால் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறும் அவர்களின் வசதிக்கேற்றவாறும் வேறு இடத்தில் பாடசாலையை இடமாற்றிக் கொடுக்க கத்தோலிக்க திருச்சபை தீர்மானித்தது. அதற்காக திருச்சபைக்குச் சொந்தமான வத்தளை பிரதான வீதியில், 90 பேர்சஸ் காணியைப் பயன்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த 90 பேர்சஸ் காணியில் ஏற்கனவே சிங்கள பாடசாலையொன்று இயங்கி வந்த நிலையில் தற்போது அது மூடப்பட்டுள்ளது. இந்த காணியானது கத்தோலிக்க திருச்சபையினால் சிங்கள பாடசாலை அமைப்பதற்காக கொடுக்கப்பட்டதாகும்.

தற்போது அப்பாடசாலை மூடப்பட்டுள்ளதால் மீண்டும் அந்த காணி திருச்சபைக்கே சொந்தமாகியுள்ளது. அதனாலேயே அவ்விடத்திலேயே மேற்படி தமிழ்ப் பாடசாலையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்துக்கு இணங்க அக்காணியில் மாணவர்களின் கல்வி நடவடிக்கையின் பொருட்டு 3 மாடிக் கட்டிடமொன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த பாடசாலை இடமாற்றத்துக்கு அனைத்துத் தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில், சில அரசியல் சக்திகள் மாத்திரம் அதனைப் பெரிதுபடுத்தி பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இருப்பினும் பாடசாலை மாணவர்களின் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள இந்த தீர்மானத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கத்தோலிக்க திருச்சபையின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்' என்றார்.


  Comments - 0

  • xlntgson Monday, 19 September 2011 10:08 PM

    இந்தப் பாடசாலையை தரம் உயர்த்தவும் வேண்டும். நீர் கொழும்புக்கும் கொழும்புக்கும் இடையில் இதொரு பாடசாலையே தமிழ் மூலம் படிக்க அரசப் பாடசாலையாக இருக்கிறது.
    மேலும் ஒரு பாடசாலையைத் தொடங்க போதுமான மாணவர்கள் இருக்கிறார்களா என்று கணக்கெடுப்பு செய்ய வேண்டும். கொழும்புப் பாடசாலைகளில் நெருக்கடி குறையும் காலை நேர வாகன நெரிசல் குறையும் கந்தான, ஜா ஏல, ஏக்கல கொட்டுகொட கட்டுநாயக்க என்று தமிழ் & முஸ்லிம்கள் சிதறி வாழ்வதையும் அவர்கள் போக்குவரத்துக்கு அள்ளுண்டு மீண்டும் கொழும்புக்கே திரும்பிவிடுவதையும். அவதானிக்கலாம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .