2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

'ஒலிவர் டுவிஸ்ட்' பாணியில் கொடுமைப்படுத்தப்பட்ட சிறுவன் தொடர்பாக உயர்நீதிமன்றில் வழக்கு

Super User   / 2011 ஒக்டோபர் 07 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.செல்வநாயகம்)

'ஒலிவர் டுவிஸ்ட்'  கதையில் வருவது போன்று கொடுமைகளை அனுபவித்ததாக கூறப்படும் ஒரு சிறுவனின் நிலை பற்றி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் ஒக்டோபர் 31 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

15 வயதான சிவா சிவனேஸ்வரன் சிவலிங்கம் சார்பில், சட்டம் மற்றும் நீதிக்கான பவுண்டேசன் இந்த மனுவை தாக்கல் செய்தது.

மேல் மாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்கள ஆணையாளர், ஜி.பி.டி. சோமரட்ன, களுத்தறை நன்னடத்தை உத்தியோகஸ்தர் டபிள்யூ.சி. பிரியங்கனி, பாதிக்கப்பட்ட சிறுவன் சிவா, தேசிய சிறுவர் நன்னடத்தை அதிகாரசபை தலைவி அனோமா திசாநாயக்க மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இவ்வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த மனுவில் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகும் சீர்திருத்த நிறுவன பிள்ளைகள் பலர் உள்ளதாக கூறப்படுகிறது. சிவா (15), அயேஷ் உபசாந்த (15), தயா தனுஷன் (15) ஆகிய மூன்று பிள்ளைகள் மக்கொனவிலுள்ள டொன்பொஸ்கோ சிறுவர் இல்லத்தில் கொடுமைப்படுத்தப்பட்டதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

பாடசாலை முடிந்தபின், இவர்கள் பன்றிகள் மற்றும் வேறு பண்ணை விலங்குகளை கவனிக்கும் வேலையில் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டனர் எனவும் சிலவேளை உணவு கொடுக்காமலும் இவர்களிடம் வேலை வாங்கப்பட்டது என மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஜனவரி 10 ஆம் திகதி விலங்குப் பண்ணையில் பசியோடு வேலைசெய்தபின் இந்த மாணவர்கள் சமையலறைக்குள் நுழைந்து தேநீர் அருந்தினார்கள். இதனால், ஆத்திரம் கொண்ட சிறுவர் இல்ல ஆசியர்கள், உத்தியோகஸ்தர்கள், பணிப்பாளர் மாக்கஸ் அருட்சகோதரர் ஆகியோர் இந்த பிள்ளைகளை தாக்கியபின் பயகல பொலிஸ் நிலையத்தில் கையளித்தனர். பொலிஸார் இவர்கள் மீது பொய்க்குற்றங்களை சாட்டி நீதிமன்றில் ஆஜர் செய்தனர் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

நன்னடத்தை ஆணையாளர், நன்னடத்தை உத்தியோகஸ்தர்கள் ஆகியோர் டொன் பொஸ்கோ சிறுவர் அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்துள்ளதாகவும் இவர்கள் தமது கடமைகள், பொறுப்புகளை நிறைவேற்றத் தவறிவிட்டனர் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஷிராணி ஏ. பண்டாரநாயக்க, நீதியரசர் பி.ரட்னாயக்க ஆகியோர் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஒக்டோபர் 31 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X