2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

இளைஞர், யுவதிகளில் ஊடக ஆற்றலையும் எடுத்துக்காட்டிய இளைஞர் ஊடக மாநாடு

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 05 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். இளைஞர் யுவதிகள் கலந்து கொள்ளும் ஊடகச் சுற்றுலாவும் சமூக ஊடகத்தின் வாயிலான சமூக வலுவாகம் தொடர்பான ஐந்து நாள் வதிவிடச் செயலமர்வும் கொழும்பில் அண்மையில் இடம்பெற்றது. 
 
இளைஞர்கள், பெண்கள், மீனவர்கள் மற்றும் சகவாழ்வு தொடர்பான சமூக பிரச்சினைகளை, ஆற்றல் மிக்க ஊடகமான வானொலி நாடகத்தினூடாக எடுத்துக்கூறுதல் தொடர்பில் தெரிவு செய்யப்பட்ட இருபது இளைஞர், யுவதிகளின் ஆற்றலை மேம்படுத்தும் செயற்றிட்டம் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாகவே இளைஞர், யுவதிகளின் கொழும்புக்கான ஊடக விஜயம், ஊடக மாநாடு மற்றும் சமூக வலுவாக்கலில் ஊடகம் தொடர்பான செலயமர்வும் இடம்பெற்றது. இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் இச்செயற்றிட்டத்தை மிகவும் வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றது.
 
ஜூலை 17ஆம் திகதி தொடக்கம் 22ஆம் திகதிவரை இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 20 இளைஞர், யுவதிகள் பங்குபற்றினர். இவர்களுள் 14பேர் பெண்களாவர். யாழ். பல்கலைக்கழகத்தின் நாடகமும் அரங்கியலும் மற்றும் ஊடகம் தொடர்பான கற்கைகளில் ஈடுபடும் 16 மாணர்களும் இதில் பங்குபற்றினர். 
 
தெரிவுசெய்யப்பட்ட இருபது இளைஞர்களை சமூகத்தில் காணப்படுகின்ற பிரச்சினைகளை எடுத்துக்கூறலுக்கான பிரதான பங்குதாரர்களாக மாற்றுவதே இத்திட்டத்தின் பிரதான இலக்காகும். மேலும் இப்பிரச்சினைகளுக்காக பொதுமக்களை ஒன்றிணைத்து செயற்படுத்துதல், இப்பிரச்சினைகள் தொடர்பாக இயங்குகின்ற சிவில் சமூகத்தினை வலுப்படுத்தலும், பிரதான நிலை ஊடகங்களினூடாக உரையாடலினை மேற்கொள்தல் மற்றும் மக்கள் தமது பிரச்சினைகளை எடுத்துக்கூறுவதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக்கொடுத்தல் என்பன இத்திட்டத்தில் உள்ளடங்கும் இலக்குகளாகும். 
 
யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள், பெண்கள், மீனவர்கள் மற்றும் சகவாழ்வு தொடர்பான சமூக பிரச்சினைகளுக்கான மூலத்தை அறிந்துகொள்வதற்கான கள ஆய்வினை தெரிவு செய்யப்பட்ட இளைஞர்கள் மேற்கொண்டனர். இளைஞர்களுக்கான தொழில் வாழிகாட்டல் வசதிகள் இன்மை, இளைஞர் யுவதிகளிடம் தொழிலாற்றலை வளர்த்துக்கொள்வதற்கான விழிப்புணர்வு போதாமை, பெண்களுக்கு எதிரான வன்முறை, மீனவ சமூகத்தில் நிலவும் வாழ்வியல் பிரச்சினைகள், சட்ட விரோதமாக வெளிநாடு செல்வதில் இளைஞர்களிடையே நிலவிவரும் ஆர்வம், தமிழ், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்களுக்கிடையிலான சகவாழ்வு தொடர்பான பிரச்சினைகள், விதவைகளின் வாழ்வியல் மேம்பாடு, இளைஞர்கள் போதை வஸ்துக்கு அடிமைப்படுதல் என பல பிரச்சினைகள் இதன் போது வெளிக்கொணரப்பட்டன. 
 
களத்திலிருந்து பெறப்பட்ட முடிவுகளை மையமாக வைத்து வானொலி நாடகம் எழுதுவதற்கான பயிற்சியினை இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் மேற்கொண்டது. இப்பயிற்சி நெறி 10 நாட்களைக் கொண்ட வதிவிடச் செயலமர்வாக அநுராதபுரத்தில் இடம்பெற்றது. இதில் யாழ்ப்பாண சமூகத்தில் இணங்காணப்பட்ட பிரச்சினைகளை வகைப்படுத்தல், அடையாளப்படுத்தல், கதாபாத்திரங்களை உருவாக்குதல், பிரச்சினைகளை மையப்படுத்திய காட்சிகளை வடிவமைத்தல், யதார்த்தமான கதைகளை உருவாக்குதல், கதை பிரதியாக்கம் மற்றும் செம்மைப்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது. 
 
பயிற்சிநெறி தொடர்பாக கருத்துத் தெரிவித்த யாழ். ஊடகக் கல்லூரி மாணவன் யுகநாத் 'நடைபெற்ற இந்த 10 நாட்களில் சமூகத்தில் உள்ள அடிமட்டத்தினர் வரைக்கும் எடுத்து செல்லக்கூடிய ஆற்றல் வானொலிக்குண்டு என அறிந்து கொண்டேன். தனி மனிதனின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் ஆற்றல் அதிகமாக உள்ள ஊடகம் வானொலியாகும். ஒரு நாடகத்தினை எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை இந்தப் பயிற்சிப் பட்டறை மூலம் தான் அறிந்து கொண்டேன்' எனத் தெரிவித்தார். 
 
பயிற்சிநெறியில் கலந்து கொண்ட யாழ். பல்கலைக்கழக முதலாம் வருட மாணவி சிந்துஜா இது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையில் 'நான் உண்மையாகவே ஒரு வானொலி நாடகம் எப்படி உருவாக்கி எழுகிறது எப்படியென்று தான் படிக்க வந்தேன். சமூக பிரச்சினைகளை ஒரு வானொலி நாடகம் மூலம் வெளிக்கொண்டு வந்து அதன் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியுமென்று நான் நம்பவில்லை. ஆனால் நேற்றும் இன்றும் எல்லோருடைய வானொலி நாடகத்தின் கதையை கேட்ட பிறகு பொதுவான பிரச்சினைகளை கொண்டு வானொலி நாடகங்களை உருவாக்கியிருந்தாலும் அதிலையும் சின்ன சின்ன மக்கள் பிரச்சினைகளையும் யதார்த்தமாக வெளிப்படுத்தியிருப்பதை கேட்கும் போது ஒரு வானொலி நாடகம் மூலம் உண்மையாகவே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியுமென்று நம்பிக்கை வந்திருக்கிறது' என்றார்.
 
வானொலி நாடகம் மக்களின் நடத்தை, உளப்பாங்கு என்பவற்றில் நேர்நிலையான தாக்கத்தினை கொண்டு வருவதுடன் சமுக பிரச்சினைகள் தொடர்பான தாக்கமான விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய கலையாகும். ஆனால் கடந்த காலங்களில் இந்தக் கலை பெரும்பாலும் கொழும்பை மையமாகக் கொண்டதாவே இதுவரை இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்கள் இதில் பங்குபற்றுவதற்கான நேரடி வாய்ப்புகள் இருக்கவில்லை. அத்தோடு, வானொலி நாடகத்தின் உண்மையான சமூக வீரியம் இதுவரையில் ஒரு தனித்துறையாக வளர்ந்ததாகவும் கொள்ள முடியாது. இச்செயற்றிட்டம் இத்தகைய இடைவெளிகளை நிரப்பும் பணியைச் செய்துள்ளது. 
 
செயற்திட்ட நோக்கங்கள்
1. வானொலியினூடான சமூக அறிவூட்டலுக்காக தெரிவு செய்யப்பட்ட 20 இளைஞர்களை பயிற்றுவித்தல்.
2. இளைஞர்கள், பெண்கள், மீனவர்கள் மற்றும் சகவாழ்வு தொடர்பான சமூக பிரச்சினைகளை எடுத்துக்கூறும் 10 வானொலி நாடகங்களை தயாரித்தல்.
3. பல்வேறுப்பட்ட ஊடகங்கள், சிவில் நிறுவனங்கள் மற்றும் ஊடக தொழில்வாண்மையானவர்களை அணுகுவதன் மூலம் இளைஞர்களை வலுவூட்டல்.
4. சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடன் தெரிவுசெய்யப்பட்ட பிரதான நான்கு சமூக பிரச்சினைகளை கலந்துரையாடுவதனூடாக வினைத்திறன் மிக்க மக்கள் இயக்கமொன்றை கட்டியெழுப்புதல்.

நாடகங்களின் உள்ளடக்கம்
யுத்தத்தினால் அங்கவீனமுற்று எவ்விதமான வருவாயுமற்று உளரீதியான பாதிப்புக்குட்பட்டு கிடக்கும் இளைஞர் தொழில், சமூக ஈடுபாடு, தனிப்பட்ட வாழ்க்கை ஆகியவற்றில் ஈடுபடுவதற்கான தன்னம்பிக்கையற்ற நிலையை எடுத்துக்காட்டல், சட்ட விரோதமான வழிகளில் வெளிநாட்டுக்கு (அவுஸ்திரேலியா) செல்வதில் இளைஞர்களிடையே அதிகரித்துவரும் மோகத்தினையும் அதன் சமூக விளைவுகளையும் எடுத்துக் கூறல் என்பன சில நாடகங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளன. 
 
இளைஞர்களை உள்நாட்டில் தமது திறமைகளை பயன்படுத்தாமல் இருப்பது மற்றுமொரு பிரச்சினை. அதனையும் இந்த நாடகம் எடுத்துக்காட்டுகின்றது. பெற்றோர் தமது பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்புவதை பெருமையாக எண்ணிச் செயற்படுவதால் அதிகமான இளைஞர்களின் சமூகமயமாதல் பாதிக்கப்படுதல், யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் சமூக மோசடிகள், இளைஞர்கள் போதைப் பொருள் பாவனைக்கு உட்படுதல், இளைஞர்களின் ஒழுக்கச் சீர்கேடு மற்றும் தொழில் பயிற்சி இல்லாமை, கணவனை இழந்த பெண்கள் எதிர்கொள்ளும் சமூக பொருளாதார பிரச்சினைகள் என்பனவற்றை மற்றும் ஒரு தொகுதி நாடகங்கள் எடுத்துக்காட்டிகின்றன. 
 
ஆணாதிக்கமும் பெண்களுக்கெதிரான வன்முறையும், பெண்களுக்கு எதிரான வீட்டு வன்முறைகள் பல வழிகளில் இடம்பெறுகின்றன. பெண்களின் சமூக மேம்பாட்டுக்கான தடைகள், பெண்களை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்தல், ஆண் - பெண் சமத்துவமின்மை, பிறர் மனை நாடுதல் என்பனவும் சில நாடகங்களில் வலியுத்தப்பட்டுள்ளன. 
 
முஸ்லிம் மற்றும் தமிழ் சமூகத்தவர்களுடைய கலாசார, மத விழுமியங்கள் பற்றிய அறிவின்மையாலும் ஆளுக்காள் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நிலை உள்ளது. அந்தப் பிரச்சினை பற்றி சில நாடகங்கள் ஆழமாக குறிப்பிடுகின்றன. அதேநேரம் மாற்று இன மக்களுக்கிடையே இடம்பெறும் தொடர்பாடல் பெரும்பாலும் சந்தேகத்துடன் நோக்கப்படுதல் பற்றியும் சில நாடகங்கள் பேசுகின்றன. 
 
மீனவ மக்களின் பண்பாட்டுப் பிரச்சினைகள், மீன்பிடித் தொழில் சட்டதிட்டங்களில் உள்ள தெளிவீனம் மற்றும் தொழிலாளி நிலையிலிருந்து மீள முடியாமை, திட்டமிடாத மீன்பிடி வாழ்க்கை ஆகியன பற்றியும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளன. இரண்டு ஊர் (நாவாந்துறை மற்றும் குருநகர்) மீனவர்களுக்கிடையிலான சக வாழ்வு அற்ற நிலையையும் தொழில் போட்டி நிலைமையான வலையை அறுத்துக் கொண்டு போதல் பற்றிய பிரச்சினைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளன. கடல் தொழிலில் வருமானம் குறைவதானால், மீனவர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுதல் என்பன பற்றியும் இளைஞர்களின் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. 

புத்தாக்கமாக இடம்பெற்ற இளைஞர் ஊடக மாநாடு
இந்த செயற்றிட்டத்தில் இளைஞர்களின் ஊடக மாநாடு மிகவும் முக்கியமானதாகும். பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சகவாழ்வு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்பன தொடர்பான நான்கு அளிக்கைகள் இடம்பெற்றன. இளைஞர்கள் தாம் கற்றுக்கொண்டவை தாம் பெற்றுக்கொண்ட அனுபவங்கள் என்பனவற்றை எடுத்துக்காட்டும் இரண்டு அளிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இவையாவும் ஊடகம் மற்றும் சமூக வலுவாக்கத்தில் இளைஞர்கள் பெற்றுள்ள அதீத தகுதியை எடுத்துக்காட்டின. இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது. 
 
30 வருட யுத்தத்தினால் ஊடக உலகத்திலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டிருந்த யாழ். இளைஞர்கள் நாம் கலந்து கொண்ட ஊடகப் பயணம் தொடர்பான கருத்துக்களையும் வெளியிட்டனர். 
 
புதிய தொழிநுட்ப முறைகளை அறிய முடிந்தது. அரச மற்றும் தனியார் ஊடகத் துறைகளில் உள்ள வேறுபாடுகளை அறிய முடிந்தது. சமூக வலையமைப்பில் உள்ள முக்கிய தன்மைகளைக் அறிய முடிந்தது. சமூகப் பிரச்சினைகளை வெளிப்படுத்தக் கூடிய களங்களை அறிய முடிந்தது. 
 
இளைஞர்களாகிய எமது சந்தர்ப்பங்களை நழுவி விடாது, தேடல்கள் மூலம் முன்னேற்ற முடியும். சமூக பிரச்சினைகளை நாம் நுணுக்கமாக கையாண்டு அதனை வெளிக்கொணர வேண்டும் என்ற துணிவு வந்துள்ளது. தமிழர்களாகிய நாம், தொழிநுட்பத்துறையினைக் கற்று அதன் ஊடாக சிறப்பான அடைவுகளை மேற்கொள்ள முயற்சிக்க வேண்டும். நிறைய தேடல்களை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது. நாம் பொறுத்தமான இலட்சியங்களின் ஊடாக தொழிநுட்ப முறையில் உள்ள தொழில்களை மேற்கொள்ள வேண்டும் என இச்சுற்றுலாவில் கலந்து கொண்ட மாணவி விமர்ஜினியா கொஸ்மஸ் தெரிவித்தார். 
 
ஊடகத்துறையில் எவ்வாறு எம்மை வகுத்துக் கொள்ளலாம். அதற்கான அணுமுறைகளை அறியக் கூடியதாக உள்ளது. எங்களுக்குள்ள திறமைகளை நாம் வகுத்துக்கொள்ள வேண்டும். வானொலி நாடக நடிகராயின் எமது திறமை மிக்க தனித்தவத்தை பேணிக்கொள்ள வேண்டும். ஊடகத்தில் புதிதாக வருகின்ற இளைஞர்கள் வெட்கத்தையும் பதற்றத்தையும் கலைந்து கொள்ள வேண்டும். எமக்கு தெரிந்த விடயத்தை மற்றவர்களுடன் பகிர வேண்டும். இச்சுற்றுலா மூலம் வானொலி நாடக ஒலிபரப்பு மற்றும் நிகழ்ச்சி எவ்வாறு தொகுத்து வழங்குவது என்ற விடயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்கின்ற உத்வேகம் இப்போது எமக்குள் ஏற்பட்டிருக்கின்றது. எல்லாவற்றையும் விட யாழ். மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்ற தைரியம் வந்திருக்கின்றது என்றார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எஸ்.தர்சன்.
 
ஊடகச் சுற்றுலாவில் கலந்துகொண்ட யாழ். பல்கலைகழக மாணவி மேரிஸ்டல்லா பின்வருமாறு தனது அனுபவத்தை எடுத்துக்காட்டினார் 'நான் சென்று பார்வையிட்ட அனைத்து ஊடகங்களிலும் தொழிநுட்ப முறைகள் ஒளிபரப்பு முறைகளை நேரடியாக பார்த்தோம். முதல் முறையாக இளைஞர்கள் உழைப்பதற்கும் தங்கள் திறமைகளை வெளிக்காட்டுவதற்கும் தங்களுக்கு என்று தளத்தை உருவாக்குவதற்கும் சமூக வலைத்தளங்கள் உதவி புரிகின்றன. அதனை இளைஞர்களே தேடியறிந்து கொள்ள வேண்டும். அந்த துறையில் நாட்டம் திறமை உள்ளதோ அதனை துணிவுடனும் உன்னதத் தன்மையுடனும் வெளிப்படுத்த வேண்டும் என்பதை அறிந்தேன். எனது எதிர்கால ஊடகப் பயணத்திற்கு இது பலமான ஊக்குவிப்பாகும்'. 
 
யாழ். ஊடகக்கல்லூரி மாணவி ஏ.சன்யா 'தனியார் ஊடகங்களில் உண்மையான ஒலி / ஒளிபரப்பு முறைகளை நேரடியாக பார்க்க, கேட்க முடிந்தது. தொலைக்காட்சி, வானொலி தொகுப்பாளர்கள் பயன்படுத்துகின்ற தொழிநுட்ப முறைகளையும் பணிகளையும் அறிய முடிந்தது. எடிட்டிங் தொடர்பாக மேலதிக அறிவினைப் பெற விரும்புகிறேன். எதிர்காலத்தில் வானொலி தொகுப்பாளர் பணியினை செய்வதற்கு எண்ணியுள்ளேன். அதற்காக வானொலி தொழிநுட்ப விடயங்களை அதிகம் அறிய இச்சுற்றுலா அதிகம் துணைபுரிந்தது. யாழ். மக்களின் பிரச்சினைகளை துணிவுடன் எடுத்துக்கூறும் ஆற்றலையும் இந்த சுற்றுலா எனக்கு வழங்கியது'. 

இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம்
இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் சமூக வலுவாக்கம், ஜனநாயக மயமாக்கம் மற்றும் எடுத்துக்கூறல் என்பவன்றிற்கான தாக்கமான கருவியாக ஊடகத்தின் பயன்பாட்டை அதிகம் ஊக்குவிக்கும் தேசிய அளவிலான நிறுவனமாகும். அபிவிருத்திக்கான ஒலிபரப்பு, சமூக ஒலிபரப்பு, ஊடகவியலாளர்களின் இயலுமை விருத்தி, சமூக மேம்பாடு, சமூக அபிவிருத்தி மற்றும் ஜனநாயக மயமாதல் ஆகியவற்றின் ஊடகத்தின் பங்கு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்தல் என்பன இந்த நிறுவனத்தின் முக்கியமான செயற்றிட்டங்களாகும். சமூகவானொலி, வானொலி நாடகம், ஊடகமும் பெண்களும், ஊடகமும் அபிவிருத்தியும் ஆகிய துறைகளில் சர்வதேச நிறுவனங்களுடன் மிக நெருங்கிய தொடர்பினைப் பேணிவரும் மன்றம் கடந்த 2007ஆம் ஆண்டு தொடக்கம் அதன் தலைமையகத்தைக் கொழும்பில் கொண்டு இயங்குகின்றது. இலங்கையில் நவீன வானொலி நாடகம் பற்றியும் சமூகவலுவாக்கல் மற்றும் எடுத்துக்கூறல் பற்றியும் நிபுணத்துவப் பயற்சிகளை வழங்கும் ஒரே நிறுவனம் இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றமாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--