2020 ஜூன் 05, வெள்ளிக்கிழமை

ஓய்வு விடுதிக்கு எதிராக பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2017 செப்டெம்பர் 24 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

நீர்கொழும்பு - தலாதூவ வீதியில் அமைந்துள்ள ஓய்வு விடுதிக்கு எதிராக, பிரதேசவாசிகள், இன்று (24) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

"குறித்த விடுதி அறைகள், தனியார் வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்கள் உட்பட இளவயதினருக்கு வாடகைக்கு வழங்கப்படுகின்றன. மேலும், இந்த விடுதியில் இடம்பெறும் தகாத செயல்கள் காரணமாக, பிரதேசவாசிகள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இங்கு இடம்பெறுகின்ற சட்டவிரோதச் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்" என வலியுறுத்தியே, இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, பிரதேசவாசிகள், எதிர்ப்பு சுலோகங்களை ஏந்தியிருந்ததோடு, கோஷங்களையும் எழுப்பினர். பின்னர் குறித்த விடுதியின் பெயர் பொறிக்கப்பட்ட அறிவித்தல் பதாதையைத் தீயிட்டு கொளுத்தினர்.

இது தொடர்பாக பிரதேசவாசிகள், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

“இந்த விடுதி அமைந்துள்ள தலாதூவ வீதியில், தலாதூவ கோவில் அமைந்துள்ளது. அருகில், தேவாலயங்கள் உள்ளன, தனியார் வகுப்புகள் உள்ளன. இவற்றில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கற்கின்றனர். இந்த வீதி வழியாக பாடசாலை மாணவர்கள் பயணிக்கின்றனர். இந்நிலையில், சட்டவிரோதமான முறையில் இங்கு விபசார விடுதி நடத்தப்படுகிறது. "அறைகள், இள வயதினருக்கு வாடகைக்கு வழங்கப்படுவதன் மூலமாக, மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். நாங்கள் இது தொடர்பாக பொலிஸ் நிலையத்திலும், மாநகர ஆணையாளரிடமும் முறைப்பாடு செய்துள்ளோம். ஆனால், விடுதி உரிமையாளர், சட்டவிரோதச் செயல்கள் இடம்பெறுவதை நிறுத்தவில்லை. விடுதியின் உரிமையாளர், சட்டவிரோதச் செயல்களும் ஒழுக்கக்கேடான செயல்களும் விடுதியில் இடம்பெறாமல், உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையேல், பாரதூரமான விளைவுகளை சந்திக்க வேண்டி ஏற்படும்.

"விடுதி உரிமையாளர், இது தனது மனித உரிமை என்று தெரிவிக்கிறார். அப்படியானால், பிரதேசவாசிகளின் மனித உரிமை பற்றி அவர் என்ன சொல்லப்போகிறார்?" எனக் கேள்வியெழுப்பினர்

ஆர்ப்பாட்ட இடத்துக்கு வருகை தந்த மேல்மாகாண சபை உறுப்பினர் ரொயிஸ் பெர்ணான்டோ கருத்துத் தெரிவிக்கையில்,

“நீர்கொழும்பு நகரில், இதுபோன்ற சட்டவிரோதச் செயல்கள் இடம்பெறும் விடுதிகள் அதிகரித்து வருகின்றன. எமது நாட்டில் மேலதிக வகுப்புகள் நடைபெறும் இடங்களில், இதுபோன்ற விடுதிகள் நடத்துவதை சிலர் மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் அதிகமாக வசிக்கும் இடங்களில் இதுபோன்ற விடுதிகள் நடத்துவதற்கு, அதிகாரிகள் இடமளிக்கக்கூடாது. இல்லையேல், பொதுமக்கள் சட்டத்தை கையில் எடுப்பார்கள்” எனத் தெரிவித்தார்.

சம்பவ இடத்துக்கு பொலிஸார் வருகைதந்து, பிரதேசவாசிகளின் கருத்துகளைக் கேட்டதோடு, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X