2020 ஓகஸ்ட் 14, வெள்ளிக்கிழமை

நீர்கொழும்பு மீனவர்களின் போராட்டம் தொடர்கிறது

Editorial   / 2018 ஜூன் 09 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

 

அரசாங்கம் அறிவித்துள்ள புதிய மண்ணெண்ணெய் குறைப்பு வேண்டாம் எனவும்  பழைய விலையான 44 ரூபாய்க்கே, மண்ணெண்ணெயை  மீனவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் இல்லையேல்  எதிர்வரும் திங்கட்கிழமை முதல்  நாடு தழுவிய ரீதியில், வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் நீர்கொழும்பு மீனவர்கள் முன்னெடுத்து வரும் சத்தியாகிரக போராட்டம் இரண்டாவது நாளாகவும்  இன்று தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நீர்கொழும்பு கடற்கரைத் தெருவில் அமைந்துள்ள சாந்த செபஸ்த்தியன் தேவாலய முன்றலில், இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் நேற்று ஆரம்பமாகி  இரண்டாவது நாளாகவும் இன்று தொடர்கிறது.

நீர்கொழும்பு ஐக்கிய மீனவர் சங்கத்துடன் இணைந்து  நீர்கொழும்பில் உள்ள மீனவர் சங்கங்கள், இந்தச் சத்தியாக்கிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் பெரும் எண்ணிக்கையான மீனவர்களும் தேவாலய முன்றலில் குழுமியுள்ளனர்.

நாளை  நள்ளிரவு 12 மணி வரை சத்தியாக்கிரகப் போராட்டம் இடம்பெறும் எனவும் அரசாங்கம் வாக்குறுதி அளித்தது போன்று பழைய விலைக்கு மண்ணெண்ணெயை வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் மீனவர்கள் வீதியில் இறங்கி பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவர் எனவும் மீனவர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, மீனவர்கள் தொழிலுக்கு செல்லாததன் காரணமாக, நீர்கொழும்பில் உள்ள மீன் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகின்றன. அத்துடன், படகுகள் களப்பு மற்றும் கடற்பகுதிகளில் தரித்து வைக்கப்பட்டுள்ளன.

தொழிலுக்கு செல்லாததன் காரணமாக, தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதிகரிக்கப்பட்டுள்ள விலைக்கு மண்ணெண்ணெயை  கொள்வனவு செய்து தொழிலில் ஈடுபட்டால் நட்டம் ஏற்படும் எனவும் மீனவர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--