2021 மே 18, செவ்வாய்க்கிழமை

எண்ணெயைவிட அசேதன பசளையால் நிலத்தடி நீர் பாதிப்படைகின்றது

Kogilavani   / 2015 ஒக்டோபர் 02 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாங்கள் 'நிலத்தில் எண்ணை, எண்ணை' என்று சில காலத்துக்கு முன்னர் கூக்குரல் இட்டுக் கொண்டிருந்தோம். ஆனால் நீருக்கு பாதிப்பு எண்ணெயில் இருந்து வருவதிலும் பார்க்க பல மடங்கு அதிகமாக அசேதனப் பசளைகளால் வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது' என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

சேதனப் பசளைப் பிரயோகத்தை ஊக்குவிப்பதற்கான நிகழ்ச்சி 2015 நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (02) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.

முக்கியமாகப் புகையிலைப் பயிர் செய்வோர் தீவிர அசேதனப் பசளைகளை பாவிப்பதனூடக நிலத்தடி நீரை வெகுவாகப் பாதிப்படையச் செய்கின்றனர்.  வருவாயின் நிமித்தம் வளங்களை மாசுபடுத்துகின்றார்கள். இன்றைய கால கட்டத்தில் இவை யாவும் எம்மால் கவனத்துக்கு எடுத்து வரப்படுகின்றது.

அசேதனப் பசளையால் கூடிய வருமானம் கிடைக்கின்றது என்ற எண்ணத்தால் சுற்றுச் சூழல் பாதுகாப்பையும் சுகாதாரத்தையும் தூர காலப் பாதிப்புக்களைக் கருத்தில் கொள்ளாமலும் இருந்து வந்துள்ளோம். அண்மைக்காலங்களில் அசேதனப் பாவிப்புகளால் ஏற்படும் தீமைகளை நாங்கள் உணரத் தொடங்கியுள்ளோம். எம்மை நாமே அழித்து வருகின்றோம் என்பது புலப்பட்டுள்ளது.

அண்மையில் ஹம்பாந்தோட்டையில் ஒரு தொழில் ஏற்பாட்டை நிறுவ முயற்சி எடுக்கப்பட்டது. அது சுற்றுச் சூழலைப் பாதிக்கும் என்று அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது உடனே குறித்த நபர்கள் மன்னாரில் அதை நடத்த மத்திய அரசாங்கத்துடன் சேர்ந்து நடவடிக்கை எடுத்தார்கள். அதன் தாற்பரியத்தை அறிந்து எமது அமைச்சர் குழாம் 'எமக்கும் வேண்டாம்' என்று கூறியுள்ளோம். ஆனால் வடமாகாணசபை வரமுன் 'இதோ அதோ' என்று அந்தத் தொழில் ஏற்பாடு இங்கு தொடங்குவதற்குச் சகல நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டிருந்தன.

இன்று பலவிதமான செயற்றிட்டங்களை வெளியில் இருந்து வந்து பலர் வடமாகாணத்துக்கு நன்மை தரும் என்று அறிமுகப்படுத்தப் பார்க்கின்றார்கள். ஆனால் அவற்றின் நீண்ட காலப் பாதிப்பைப் பற்றி எமது அலுவலர்கள் முற்றாக ஆராய்ந்தே எமக்கு அறிவுறுத்தல்கள் ஆலோசனைகளைத் தரவேண்டும்.

அலுவலர்களின் கையில் வைத்தும் பையில் வைத்தும் தமது காரியத்தை முடிக்கப் பலர் எத்தனித்து வருகின்றார்கள். தூரகால அனுசரணை அற்ற பாதிப்பைப் பற்றித் தெரிந்தும் எமது அலுவலர்கள் சிலர் குறுகிய நன்மைக்காக, சுய நன்மைக்காக இப்பேர்ப்பட்ட செயற்றிட்டங்களுக்கு இடமளித்தால் காலக்கிரமத்தில் அவர்களின் வருங்கால சந்ததியினரே அவற்றால் அவதிக்குள்ளாவார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எமது வடமாகாணம், வன்முறைகளில் இருந்து வன்செயல்களில் இருந்து படிப்படியாக வெளிவந்து கொண்டிருக்கின்றது.

எதேச்சாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது. அதேபோல் மரணத்தைத் தரும், மயக்கத்தைத்தரும், ஊனங்களை உருவாக்கக் கூடிய பொருட்களைத் தீண்டாது விட்டு சுகமான சுத்தமான, சுகாதாரமான, சுபீட்சம் மிகுந்த ஒரு வருங்காலத்தை நோக்கிப் பயணிப்போம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .