2021 ஜனவரி 23, சனிக்கிழமை

கஞ்சாவினால் யாழ்ப்பாணத்துக்கு சிக்கல்

Menaka Mookandi   / 2016 ஜூலை 08 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

'யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் கஞ்சா மீட்புக்கள் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிடுவதனூடாக, யாழ். மாவட்டத்தின் மீதான வெளிச்சமூகத்தின் பார்வை மாற்றமடைந்து எமது சமூக கலாசாரம் மழுங்கடிக்கப்படுகிறது' என வடக்கு மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட சிவில் சமூக பாதுகாப்பு குழுக்கூட்டம், இன்று வெள்ளிக்கிழமை (08), யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'யாழ். மாவட்டத்துக்கென ஒரு கலாசாரம் உள்ளது. அதை இல்லாமல் செய்யும் வகையில், தற்போது சமூக விரோத செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. குறிப்பாக கஞ்சா தொடர்பான செய்திகள்  தினமும் வெளிவருகின்றன. ஆனால், கைது தொடர்பாக எந்த தகவல்களும் வெளிவருவதில்லை. இதனால், வெளிநாடுகளில் இருந்து வருகை தருவோர், யாழ். மாவட்டத்தை கஞ்சா வியாபாரம் இடம்பெறும் தளமாக பார்க்கின்றனர். இதனால், எமது சமூகத்தின் அடையாளம் மாற்றமடையும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது' என்றார்.

'எனவே, கஞ்சா மீட்ப்புக்கள் தொடர்பான விடயங்களை இரகசியமாக வைத்து இக்கடத்தல்களில் ஈடுபடும் பிரதான சூத்திரதாரிகளை வெளிக்கொண்டுவர வேண்டும். இதனை விடுத்து ஊடகங்களுக்கு இத்தகவல்களை வழங்க வேண்டாம்' என அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், 'யாழில் கஞ்சா பிடிபடுவதால் யாழ்ப்பாணத்துக்கு கெட்ட பெயர் இல்லை. யாழ்பாணத்தை விட வேறு மாவட்டங்களிலும் ஏக்கர் கணக்கில் சட்டவிரோதமாக கஞ்சா வளர்க்கப்படுக்கப்படுகிறது. நேற்றும் புத்தளத்தில் 100 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. ஆனால், யாழில் கடல் வழியாகவே கஞ்சா கடத்தப்படுகிறது.

இதில் மூன்று குழுக்கள் செயற்படுவதாக  எமக்கு சந்தேகம் உள்ளது. இக்குழுக்களை பிடித்து யாழில் கஞ்சாவை இல்லாமல் செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கையினை மேற்கொள்கின்றனர். மற்றபடி ஊடகங்களின் வாயை மூடுவது என்பது முடியாத செயலாகும்' என தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .