2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

’தமிழரசுக் கட்சியினர் தீர்மானம் குறித்து ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை’

Editorial   / 2019 நவம்பர் 08 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன

 

ஐக்கிய தேசியக் கட்சியின் அபிமானிகளாகவே, தமிழரசுக் கட்சியினர் இருக்கின்றனர் என்றும் அந்தக் கட்சியினருக்கு அவர்கள்  ஆதரவளிப்பது,  ஆச்சரியப்படக் கூடிய விடயம் அல்ல என்றும் தெரிவித்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளருமான இராமலிங்கம் சந்திரசேகரன், எலும்புத்தண்டுக்குப் பின்னால் ஓடும் நாய்க் குட்டிகளைப் போன்று ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னால் கூட்டமைப்பினர் ஒடுகின்றனர் என்றும் தெரிவித்தனர்.

யாழில் உள்ள தமது அலுவலகத்தில், இன்று(8)  நடத்திய ஊடகவியலாளர்  சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்துரைத்த அவர், “தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கப் போவதாக முடிவொன்றை எடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து,  அதன் பங்காளிகாக இருக்கின்ற ஏனையக் கட்சிகளும் அதே முடிவை எடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருமித்த நிலைப்பாடாக அதனை அறிவித்துள்ளனர்.

“தமிழரசுக் கட்சியின் இந்த முடிவைப் பார்த்து, நாங்கள் ஆச்சரியப்பட தேவையில்லை. ஏனெனில், இந்தத் தமிழரசுக் கட்சி என்பது, ஐக்கிய தேசியக் கட்சியின் அபிமானியாகவே இருந்து வருகின்றது” என்றார். .

“இந்த ஐக்கிய தேசியக் கட்சியினர், அதை தருகின்றோம் இதை தருகின்றோம், அதை செய்வோம் இதை செய்வோம் என்று கூறுகின்ற போது, எலும்புத் துண்டுகளுக்குப் பின்னாள் ஓடுகின்ற நாய்க்குட்டிகள் போன்று,  அந்தக் கட்சியினருக்குப் பின்னால் ஓடுகின்றவர்களாக தமிழரசுக் கட்சியினர் இருக்கின்றனர்” என்றார்.

“ஐக்கிய தேசியக் கட்சியின் மூலமாக தங்களுக்கு எந்த விமோசனமும் வரப்போவதில்லை என்பது, தமிழரசுக் கட்சி தலைமையிலான கூட்டமைப்புக்கும் தெரியும். விசேடமாக, தமிழ் மக்களுக்கு எந்தத் தீர்வையும் வழங்கும் ஆற்றல் இல்லாதவர் சஜித் பிரேமதாஸ என்பதும் அனைவருக்கும் தெரியும்.

“மேலும் கோட்டாபய வரப் போகின்றார், வெள்ளைவான் வரப்போகின்றது, ஐனநாயக இடைவெளி இல்லாமல் போகப் போகின்றது என்று கூறிக்கொண்டு மறுபுறம் இந்த நாட்டை நாசமாக்குகின்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தரப்பினர்களுக்கு ஆதரவளிப்பதென்பது, பயங்கரமானது” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .