2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

பொருத்து வீடுகளை மீண்டும் நிராகரித்த சி.வி

Sudharshini   / 2016 மார்ச் 18 , மு.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் வீடுகள் அமைக்கும் அரசாங்கத்தின் வீட்டுத்திட்டத்தில் அமைக்கப்படும் பொருத்து வீடுகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீண்டும் தெரிவித்துள்ளார்.

மேற்படி வீட்டுத்திட்டம் மாகாண அரசாங்கத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் மீள்குடியேற்ற அமைச்சு நடைமுறைப்படுத்த எத்தனிக்கின்றது என்பது தொடர்பில் முதலமைச்சரிடம் கருத்துக்கேட்டபோதே அவர் தனது நிராகரிப்பை கூறினார்.

இது குறித்து தொடர்ந்து அவர் கூறுகையில், 'மேற்படி வீட்டுத்திட்டத்தின்;; மாதிரி வீடொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதனைச் சென்று பார்வையிடுமாறு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் எனக்கு கூறினார். அதற்கிணங்கச் சென்று பார்த்தேன்.

வீட்டில் சுற்றுவட்டாரம் இறங்கியுள்ளது. மழைநீர் வீடுகளுக்கு நுழையும். வீட்டுக்குள் சரியான சூடு, ஒவ்வொரு அறைகளும் அதிகமாக சூடாகக் காணப்பட்டது.

மேற்படி வீடுகள் மக்களுக்கு பொருத்தமில்லையென ஆய்வுகள் மேற்கொண்ட எமது பொறியியலாளர்கள் எனக்கு கூறியிருந்தமை சரியானது என்பதை உணர்ந்தேன். அறைகளின் சுவர்கள் கோறையானவை. குத்திப்பார்த்தால் அது நன்றாகத்தெரியும். கீழே ஆணிகள் கொண்டு பொருத்தப்பட்டுள்ளன.

வீட்டில் சூரியசக்தி மின்கலம் பொருத்திக் கொடுத்துள்ளனர். அதில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் எடுக்க முடியாது. மேலும், ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதிகளவான குழாய் கிணறுகளை அமைப்பது, இங்குள்ள சூழலுக்கு பாதிப்பு. அது தொடர்பில் எங்களுடன் எந்தவித ஆலோசனைகளையும் மேற்கொள்ளவில்லை. வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முன்னர் எங்களுடன் கலந்துரையாட வேண்டும்.

எங்களுடைய சூழல், சுற்றுவட்டாரம், கலாசாரம் ஆகியவற்றுக்கும் வீடு இருக்கும் நிலை, கட்டப்பட்டுள்ள விதம் ஆகிய எதுவுமே ஏற்றுக்கொள்ள முடியாது.

வீடே இல்லாதவர்களுக்கு இப்படியொரு வீட்டைக் காட்;டி கேட்டால் அவர்கள் அதனை எடுப்பார்கள். வீட்டில், கட்டில், தொலைக்காட்சி, கணிணி இருக்கின்றது என அவர்கள் ஆசைப்படுவார்கள். ஆனால், சமுதாயத்தில் என்ன நடக்கின்றது என்று பார்க்க வேண்டும்.

ஒரு வீடு அமைக்கக செலவு செய்யும் இந்த 2.1 மில்லியன் ரூபாய்க்கு 2 அல்லது 3 வீடுகளை அமைக்க முடியும். இங்கு பலர் வீடுகள் இல்லாமல் இருக்கின்றனர். அவர்களுக்கு எல்லாம் வீடுகள் கட்டிக்கொடுக்க முடியும். வீட்டு உபகரணங்களுடன் வீடு கட்டிக்கொடுக்க வேண்டிய அவசியம் தெரியவில்லை.

மக்களுடன் கூட பேசவில்லை. சிங்கப்பூரில் செய்கின்றோம் என்று இங்கு செய்ய முடியாது. வீட்டு கட்டுமானத்தில் ஏதாவது பிழை வந்தால் யாரிடம் எங்கு செல்வது. வீடு கட்டி முடிய எல்லோரும் மறந்துவிடுவார்கள். 2 அல்லது 3 வருடங்களில் பிரச்சினைகள் வந்தால் யாரிடம் போவது? திருத்தம் செய்வதற்கான உதிரிப்பாகங்களை எங்கு பெறுவது. இங்குள்ள முறையில் செய்தால், பழுது வரும் போது, எங்கள் உத்தியோகத்தர்கள் மூலம் சரி செய்யலாம்.

அரசாங்கத்துக்கு காசு வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால், இந்த வீட்டுத்திட்டத்தில் கட்டிக்கொடுக்கும் நிறுவனம் கடனடிப்படையில் கொடுக்கின்றன. அந்தக் கடன் திருப்பிக் கொடுக்கும் போது, அனைத்து மக்களும் தான் கட்டவேண்டும். எதுவும் சும்மா கிடைக்கவில்லை. மக்கள் நீண்டகாலம் வசிக்கக்கூடிய வகையில் வீடுகள் கட்டப்படவேண்டும்' என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .