2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

பிராந்திய விமான நிலையமாக பலாலி மாற்றப்படவுள்ளது

Niroshini   / 2016 மார்ச் 04 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

“பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக மாற்றி யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கு விமான சேவையை நடத்த தீர்மானித்துள்ளோம். இதனை சர்வதேச விமான நிலையமாக மாற்றி, மக்களின் காணிகளை அபகரிக்கும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை” என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் வீடுகள் இல்லாத 65 ஆயிரம் பேருக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கும் அரசாங்கத்தின் வீட்டுத்திட்டத்தில் கோப்பாய், செல்வபுரத்தில் அமைக்கப்பட்ட மாதிரி வீட்டை இன்று வெள்ளிக்கிழமை (04) பார்வையிட்ட பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் கூறியதாவது,

“பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றப்போகின்றோம் என அரசாங்கம் கூறவில்லை. மாறாக பிராந்திய விமான நிலையமாக மாற்றுவதற்கே தீர்மானித்துள்ளது. மக்களின் காணிகளை மீளவும் அவர்களிடம் வழங்குவதற்கே அரசாங்கம் எண்ணுகின்றது. ஆதலால், மக்களின் காணிகளை அபகரிக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபடாது” என்றார்.

மேலும், “நலன்புரி முகாம்களில் உள்ள மக்களுக்கு வீடுகள் அமைக்கப்படவேண்டும், என்ற நோக்குடன் இந்த வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படுகின்றது. விதவைகள், முகாம்களில் உள்ள மக்களுக்கு முன்னுரிமையளித்து இவ்வீட்டுத்திட்டத்தை வழங்குகின்றோம்.

காணியில்லாதவர்கள் தங்களை பிரதேச செயலகங்களில் பதியலாம். அதற்கான திட்டங்களும் முன்னெடுக்கப்படும்.

முகாம் மக்களுக்கு அவர்களின் சொந்த இடங்களில் இந்த வீட்டுத்திட்ட வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும். ஒவ்வொன்றாக செய்வோம்” எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .