2021 ஜனவரி 15, வெள்ளிக்கிழமை

“மாணவர்களின் பிணக்கு அடுத்த நிமிடத்தில் தீரும்”

Kogilavani   / 2016 ஜூலை 18 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

'ஒரு சிலரை உள்ளடக்கிய மாணவ குழுக்களுக்கிடையில் பல அடிப்படையில் பிணக்குகள் ஏற்படுவதுண்டு. ஆனால், அடுத்த நிமிடமே நாம் யாவரும் பல்கலைக்கழக மாணவர்கள் என்ற அடிப்படையில் ஒன்றிணைந்து ஒற்றுமையாகவே படித்து வருகின்றோம். ஆகவே, இந்தப் பிரச்சினையை பெரிதாக்க வேண்டாம்' என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

யாழ். பல்கலைக்கழக விஞ்ஞானபீட தமிழ் - சிங்கள மாணவர்களுக்கிடையில் சனிக்கிழமை (16) ஏறபட்ட மோதல் காரணமாக, பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் உட்பட அனைத்துப் பீடங்களும் தற்காலிகமாக மூடப்படுவதாக பல்கலைக்கழகப் பதிவாளர் அறிவித்துள்ளார்.  மறுஅறிவித்தல் வரும் வரையில்இ அனைத்துக் கல்வி நடவடிக்கைகளும் இடம்பெறாது எனவும் பதிவாளர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'வரவேற்பு உபசார விழா நடத்துவது வழமையானது. இந்நிலையில் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் செய்து நிகழ்ச்சி நடத்த வேண்டும் என ஒரு மாணவர் குழுவும், நிகழ்ச்சி நிரலில் மாற்றம் ஏற்படுத்தாது நிகழ்ச்சி நடத்த வேண்டும் என விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த இன்னொரு மாணவர் குழுவுக்கும் கருத்து முரண்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் பீடாதிபதியும், மாணவ ஆலோசகர்களும் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் ஏற்படுத்தாது வழமைபோல நிகழ்ச்சி நடத்துமாறும் விழாக்குழுவிடம் வலியுறுத்தி இருந்தனர். அத்துடன் துணைவேந்தரின் அனுமதி பெறாத நிகழ்ச்சிகள் நடைபெறக்கூடாது என்ற அடிப்படையிலும் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டது. பின்னர் இம்முரண்பாடு மாணவர் குழுக்களிடையே வலுப்பெற்றது.

இந்நிலையில் விஞ்ஞானபீடாதிபதி சிரேஷ்ட மாணவர் ஆலோசகர், மாணவ ஆலோசகர்கள், விரிவுரையாளர்கள் ஈடுபட்டு சுமூக நிலையை ஏற்படுத்தினர். சகல மாணவர்களினதும் பாதுகாப்புக்கருதி பாதுகாப்புக்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மூவின மாணவர்களும் ஒற்றுமையாகவே படித்து வருகின்றார்கள். இதனை மாணவர்கள், பெற்றோர், கல்விசார் பணியாளர்கள், கல்வி சாராப் பணியாளர்கள், சமூகம் முழுமையாக அறிந்துகொள்ளும். அதிகமான மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட தேசிய பல்கலைக்கழகங்களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் ஒன்று. இந்நிலையில் ஒருசிலரை உள்ளடக்கிய மாணவ குழுக்களுக்கிடையில் அடிப்படையில் பிணக்குகள் ஏற்படுவதுண்டு.

ஆனால், அடுத்த நிமிடமே நாம் யாவரும் பல்கலைக்கழக மாணவர்கள் என்ற அடிப்படையில் ஒன்றிணைந்து ஒற்றுமையாகவே படித்து வருகின்றோம். இந்நிலையில் சிலர் சிறிய பிணக்குகளையும் பூதாகரம் ஆக்கி சுயநன்மை அடைய முனைகின்றனர். இத்தகைய நிலமையை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஒருபோதும் அனுமதிக்காது' என தெரிவித்தள்ளது.

மேலும், 'தொடர்பு சாதனங்களுக்கும் ஒரு உன்னத சமூகப் பொறுப்பு உண்டு. உண்மையை அறிந்து மாணவர்களுக்கும் சமூகத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் தகவல்களை வழங்குமாறும் தொடர்பு சாதனங்களை வேண்டுகின்றோம். குறிப்பாக தென்னிலங்கை சார்ந்த தொடர்பு சாதனங்கள் மக்களுக்கு உண்மையான தகவல்களையும் உண்மையான நிலைமைகளையும் நடுநிலமையுடன் சேர்க்க வேண்டிய பொறுப்பும் அவர்களுடையது என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

ஓரளவு சுமூகமான அரசியல் சூழ்நிலையில் மாணவர்கள் கல்வியை தடையின்றி கற்கின்றபோது ஒருசில அரசியல் சக்திகள் தன்னலம் கருதி மாணவர்களிடையே ஊடுருவி மாணவர் கல்வியைப் பாதிக்கின்ற, அமைதியைக் குழப்புகின்ற நிலைமைய பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஒருபோதும் அனுமதிக்காது என்ற வகையில் உண்மை நிலையை தெரிவிக்க வேண்டிய கடப்பாடு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துக்கு உரியது.

இந்நிலையில் மாணவர்களுடைய கல்வியினைப் பாதிக்காது விரைவில் பல்கலைக்கழகத்தை ஆரம்பித்து சகல மாணவர்களின் கல்வியினையும் தொடர பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் துணைவேந்தரை வேண்டி நிற்கின்றது. இந்நிலையில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கும் என்பதனையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்' என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .