2021 மே 18, செவ்வாய்க்கிழமை

மீள்குடியேற்றம் பற்றிய அமைச்சரவை தீர்மானத்துக்கு எதிர்ப்பு

George   / 2016 ஜூலை 22 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்ப்புத் தெரிவித்து பிரேரணை 'மீள்குடியேற்றம் பற்றிய நிகழ்ச்சி நிரலில் பாரம்பரிய சிங்கள கிராமங்களும் உள்ளடக்க வேண்டும் என்ற அமைச்சரவை தீர்மானம், எங்களுடன் கலந்தோலோசிக்கப்படாமல் மேற்கொள்ளப்பட்டுள்ளது' என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டினர்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. அமைச்சரவையின் மேற்கூறிய, தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரேரணையொன்றை முதலமைச்சர் கொண்டு வந்தார்.

பிரேரணையைக் சமர்ப்பித்து  முதலமைச்சர் உரையாற்றுகையில், 'கடந்த 5ஆம் திகதி அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டத்தில் ரிஷாட் பதியுதீன், பைசல் முஸ்தாபா, டி.எம்.சுவாமிநாதன் ஆகிய அமைச்சர்களைக் கொண்ட ஒரு செயலணி நியமிக்கப்பட்டுள்ளது என்றும் அதில் மத்திய அரசாங்க அலுவலர்கள் ஆறு பேரும் வடமாகாண பிரதம செயலாளரும் வடமேல் மாகாண பிரதம செயலாளரும் அங்கம் வகிக்க வேண்டும் என்றும் முடிவு எடுத்துள்ளதாகக் கூறினார்.

மேலும் மீள்குடியேற்றம் பற்றிய நிகழ்ச்சி நிரலில் பாரம்பரிய சிங்கள கிராமங்களும் உள்ளடக்க வேண்டும் என்றும் திருகோணமலை மாவட்டமும் அதில் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

எவ்வாறாயினும், வடமாகாணத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எமது சபையை நிராகரித்து அல்லது ஓரங்கட்டி மத்தியானது தனக்குத் தகுந்தவாறு காரியங்களை எடுத்துச் செல்வதை நாம் எவருமே ஏற்றுக்கொள்ளமாட்டோம்.

இடம்பெயர்ந்த மக்கள் மட்டுமல்ல இந்தியாவில் இருந்து வருபவர்களையும் அவர்களின் பாரம்பரிய இடங்களில் குடியமர்த்தாது தான்தோன்றித்தனமாக மத்திய அரசுக்கு உகந்த முறையில் அவர்களைக் குடியமர்த்தக்கூடிய ஒரு சந்தர்ப்பம் இதனால் உருவாகியுள்ளது.

பெயரளவில் வடமாகாண சபை பிரதம செயலாளரை உள்ளடக்கி, அரசாங்கமே மேற்படி காரியங்களைக் கொண்டு செல்ல உத்தேசித்துள்ளது. இது வடமாகாண மக்களின் கருத்துக்களை உதாசீனம் செய்வதற்கு ஒப்பாகும். எம்மிடம் கேட்காமல் எம்மக்களின் மீள்குடியேற்றம் நடைபெறுவது பொதுமக்களுக்குப் பல பின்விளைவுகளைக் கொண்டுவரக்கூடியது.

13ஆவது திருத்தச் சட்டம் வந்தபின் எமக்குக் குறித்தொதுக்கப்பட்ட விடயங்கள் சம்பந்தமாக அல்லது உடன்பட்ட விடயங்களில் மத்தியானது மாகாணத்துடன் கலந்தாலோசித்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோட்பாட்டை உதாசீனப்படுத்தியே நடந்து வருகின்றது. இதை நான் பலமுறை மத்திய அரசாங்க அமைச்சர்களுக்கும், வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கும் எடுத்துக் கூறி வந்துள்ளேன்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .