2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

யாழில் கொலை , கொள்ளை வன்புணர்வு சந்தேக நபர்கள் கைது

Editorial   / 2019 டிசெம்பர் 01 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுமி ஒருவரை கடத்தி சென்று வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது,கோண்டாவில் இரும்பக உரிமையாளர் கொலை உள்ளிட்ட கொலை , கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய சந்தேக நபர்கள் என்பதனை கண்டறிந்துள்ளனர்.  

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இருபாலை பகுதியில்  கடந்த 15ஆம் திகதி 14 வயதுச் சிறுமியொருவர் தனது வீட்டிற்கு சற்று தொலைவில் தனது நண்பருடன் உரையாடிக்கொண்டிருந்த போது, அந்த வழியால் வந்த இருவர், அவர்களை மிரட்டியுள்ளனர்.

மதுபோதையில் இருந்த அந்த நபர்கள் இருவரும் சிறுமியின் நண்பரைத் தாக்கி அவரை அங்கிருந்து துரத்திவிட்டு சிறுமியை மறைவிடத்துக்கு அழைத்து சென்று சித்திரவதை செய்து வன்புணர்வுக்குட்படுத்தியுள்ளனர். அதுதொடர்பான ஒளிப்படங்களையும் அவர்கள் தமது அலைபேசியில் பதிவுசெய்துள்ளனர்.

அதன் பின்னர் வீடு திரும்பிய சிறுமி, சம்பவம் தொடர்பில் தாயாரிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமியும் தாயாரும் ஒரு வாரத்தின் பின்னர் கடந்த 23ஆம் திகதி கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளனர்.

சிறுமியின் நண்பரை அழைத்து விசாரணை செய்த பொலிஸார், அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் உரும்பிராயைச் சேர்ந்த சிவலிங்கம் விஜிதரன் அல்லது குட்டி (இவரது மற்றொரு முகவரி கிளாலி வீதி எழுதுமட்டுவாழ்) இருபாலையைச் சேர்ந்த சற்குணம் ஜெம்சன் ஆகிய இருவரை கைது செய்தனர்.

 கைது செய்யப்பட்ட இருவரிடமும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது ,  அவர்கள் இருவரும் கோண்டாவில் பகுதியில் இருந்த இரும்பகம் ஒன்றின் உரிமையாளரை அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம், கொள்ளை உள்ளிட்ட மேலும் மூன்று வழக்குகளில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் என பொலிஸார் அடையாளம் கண்டு கொண்டனர்.  

விசாரணைகளின் பின்னர் , சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் பி அறிக்கை தாக்கல் செய்திருந்த பொலிஸார், சந்தேகநபர்கள் இருவரையும் அடையாள அணிவகுப்புக்கு உள்படுத்தவேண்டும் என்று விண்ணப்பம் செய்தனர்.

வழக்கை விசாரித்த யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன், சந்தேகநபர்கள் இருவரையும் வரும் 10ஆம் திகதி அடையாள அணிவகுப்பு உள்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி அன்றுவரை விளக்கமறியல் வைக்க உத்தரவிட்டார்.

அதனையடுத்து சந்தேகநபர்கள் இருவரையும் வேறு மூன்று வெவ்வேறு வழக்குகளில் பொலிஸார் முற்படுத்தினர்.

கோண்டாவில் உப்புமடச் சந்தி இரும்பக உரிமையாளர் கொலை, கொள்ளைச் சம்பவம் மற்றும் சொத்துக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட ஏற்கெனவே உள்ள வழக்குகளிலேயே சந்தேகநபர்கள் இருவரும் முற்படுத்தப்பட்டனர்.

சந்தேகநபர்களுக்கும் கொலைக்கு தொடர்பு இருபதாக சான்று ஆதாரங்கள் உள்ளனவா? என்று பொலிஸாரிடம் மன்று கேள்வி எழுப்பியது.

கொலைச் சம்பவம் இடம்பெற்ற அன்று சந்தேகநபர்கள் இருவரும் அங்கு நின்றனர் என்று பொலிஸார் கூறினர்.

அத்துடன், கொலைச் சம்பவ இடத்தில் பெறப்பட்ட குருதி மாதிரிகளுடன் சந்தேநபர்களின் குருதி மாதிரிகள் ஒத்துச் செல்கின்றவா என்று விசாரணைகளை முன்னெடுக்க அவர்களது குருதி மாதிரிகளைப் பெற்றுக்கொள்ள பொலிஸார் மன்றில் விண்ணப்பம் செய்தனர்.

அதற்கு அனுமதியளித்த மேலதிக நீதிவான், கொலை வழக்கு உள்ளிட்ட 3 வழக்குகளிலும் சந்தேகநபர்கள் மூவரையும் வரும் 10ஆம் திகதிவரை விளக்கமறியில் வைக்க உத்தரவிட்டார்.

-எம்.றொசாந்த் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .