2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

வித்தியாவின் தாயை அச்சுறுத்தியவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Menaka Mookandi   / 2016 ஜூலை 25 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெண்ணை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதி வரை, தொடர்ந்து  விளக்கமறியலிலேயே வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் ஏ.எம்.எம்.றியால், இன்று திங்கட்கிழமை (25) உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் இரண்டு பெண்கள் தொடர்புபட்டிருந்த நிலையில், மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் மற்றும் சசீந்திரன் ஆகிய சந்தேகநபர்களின் தாயாரான தவநிதி, கடந்த 17ஆம் திகதியன்று, சிறைச்சாலையில் வைத்தே உயிரிழந்தார்.

இரண்டாவது சந்தேகநபரான சிவதேவன் செல்வராணி, தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, இந்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடந்த மே மாதம் 4ஆம் திகதி ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, சந்தேகநபர்களின் உறவினர்கள் தன்னை அச்சுறுத்துவதாக,  புங்குடுதீவு மாணவியின் தாயார், நீதிவானின் கவனத்துக்கு கொண்டு வந்தார். இது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யுமாறு மாணவியின் தாயாருக்கு நீதிவான் அவ்வேளை அறிவுறுத்தி இருந்தார். அதற்கமைய தாயாரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்ட இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

புங்குடுதீவு மாணவி, கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதியன்று, கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணைகள்இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X