2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

அல்லாரையில் தும்புத் தொழிற்சாலை உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 16 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

யாழ். தென்மராட்சி அல்லாரையில் தும்பு சார்ந்த உற்பத்திக் கிராமத்தின் பொதுவசதிகள் மத்திய நிலையம் நேற்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து வைக்கப்பட்டது.
 
மஹிந்த சிந்தனையின் கீழ் கிராமிய கைத்தொழில்கள் மற்றும் உற்பத்திக் கிராமங்களை அபிவிருத்திச் செய்யும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கை காரணமாக இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் மேற்படி தும்பு உற்பத்தி சார்ந்த மத்திய நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தென்மராட்சி பிரதேச செயலாளர் சிறினிவாசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தும்பு உற்பத்தி மேற்கொள்ளும் நவீன இயந்திரங்களுடனான நிலையத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பிரதாயபூர்வமாக திறந்துவைத்தார். இதனைத்தொடர்ந்து, தும்பு உற்பத்திக் கிராம வளாகத்தில் பொதுக்கூட்டம் இடம்பெற்றது.

இங்கு அல்லாரை தும்பு உற்பத்திக் கிராம நிர்வாக உறுப்பினரும் முன்னாள் அதிபருமான கே.தம்பு  உரையாற்றுகையில்,

வழமையாக அமைச்சர்களைப் பொதுமக்கள் தேடிச்செல்லும் வழமையினை அறிந்துள்ளோம். ஆனால், கிராம மக்களைத் தேடிவந்து உதவி செய்யும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை  நாம் பெற்றுள்ளமை பெருமைக்குரிய விடயம் என குறிப்பிட்டார்.
 
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் முற்றுமுழுதான நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட மேற்படி தும்பு உற்பத்தி நிலையத்தினூடாக தென்னம்தும்பு, தும்புத்தடி, விளக்குமாறு உள்ளிட்ட பனை தென்னைவள உற்பத்திகளை மேற்கொள்ளமுடியும் என்பதுடன், பலருக்கு வேலைவாய்ப்பும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக புதிதாக பொருத்தப்பட்டுள்ள இயந்திர சாதனங்கள் மூலம் சுமார் ஆயிரம் தேங்காய் மட்டைகளிலிருந்து நூறு கிலோ தென்னந்தும்பும் 250 கிலோ தும்புத்தூளும் பெற்றுக்கொள்ளமுடியும் என்பது மற்றுமோர் விடயமாகும். அத்துடன், கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கு மேற்படி துறையில் பயிற்சி வழங்குவதற்கென குறிப்பிட்ட காலத்திற்கு இரு பயிற்சியாளர்கள் கைத்தொழில் அபிவிருத்திசபையினால் அங்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, மேலதிக செயலாளர் அமரதுங்க கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பொதுமுகாமையாளர் திருமதி ஜஸ்மின் மன்னப்பெருமா, அல்லாரை தும்பு உற்பத்திக் கிராம தலைவி துஷாலினி அமைச்சு அதிகாரிகள் மற்றும் உற்பத்தியாளர்களுடன் பெருமளவு பொதுமக்களும் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வினைத் தொடர்ந்து அல்லாரைக் கிராம மக்களின் தேவைகள் வேண்டுகோள்கள் தொடர்பில் கோரிக்கைகளைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததுடன், அடுத்தமுறை தான் இக்கிராமத்திற்கு விஜயம் செய்யும்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நேரடியாகப் பேசி உரிய தீர்வினைப் பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்தார்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .