2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

அரசியல் தலைமைகள் தங்கள் சுயலாபத்தைக் கைவிடவேண்டும் - அமைச்சர் டக்ளஸ்

Super User   / 2010 செப்டெம்பர் 27 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(தாஸ், பாலமதி)

அரசியல் தலைமைகள் தங்கள் சுயலாபத்தைக் கைவிட்டு மக்களுக்காகச் செயற்பட முன்வரவேண்டும். இதன்மூலம் நாம் நாட்டில் அபிவிருத்தியை மேற்கொள்ள முடியும் என்று பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வசாவிளான் மகா வித்தியாலயத்தைப் பாடசாலைச் சமூகத்திடம் கையளிக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை பாடசாலையில் புனரமைக்கப்பட்ட மண்டபம் ஒன்றில் இடம்பெற்றது.

இதில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்:

வலிகாமம் வடக்கில் இன்று இடம்பெறும் இந்த பாடசாலை கையளிக்கும் நிகழ்வானது வலிவடக்குக்கான மீள்குடியேற்றத்தின் ஆரம்பகட்ட நடவடிக்கை. இதன் தொடர் நடவடிக்கையாக ஏனைய செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள இப்பாடசாலை தொடர்ந்து இங்கு இயங்குவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் விரைவில் மேற்கொள்ளப்படும். இதற்கான அனுமதி யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்கவிடம் கோரப்பட்டுள்ளது.

முழுமையாகச் சேதமடைந்துள்ள பாடசாலையை புனரமைப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கூறியமைக்கு அமைவாக தெற்கைப் போலவே வடக்கிலும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடர்ந்தும் அபிவிருத்திகள் வடக்கில் இடம்பெறும். – என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் யாழ். மாவட்டக் கட்டளைத்தளபதி மஹிந்த ஹத்துருசிங்க, வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் ப. விக்கினேஸ்வரன் ஆகியோர் கலந்த கொண்டனர்.

பாடசாலையின் பெயர்வளைவு திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டு நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--