2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

இனி இங்கு உயர்பாதுகாப்பு வலயங்கள் இருக்க முடியாது: அமைச்சர் டக்ளஸ்

Super User   / 2010 ஒக்டோபர் 23 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இது எமது அரசாங்கம், இனிமேல் இங்கு உயர்பாதுகாப்பு வலயமென்று ஒன்றில்லை. இராணுவ முகாம்கள் தேவைகருதி இருக்கலாம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தில் கூறியுள்ளார்.

 பளைப் பகுதியில் அமையப் பெற்றுள்ள இலங்கைத் திருச்சபை தேவாலயத்தில் பச்சிலைப்பள்ளி மேற்கு பிரதேச மக்களுடனான சந்திப்பிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஜனாதிபதி தலைமையில் வவுனியாவில் நடைபெற்ற வடமாகாண அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தின் போதும் இக்கருத்தையே தான் முன்வைத்ததாகவும் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாம் பெற்ற இந்த சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டுமென்றும் இதனை நாம் எவருக்கும் தாரைவார்த்துக் கொடுக்கக் கூடாதென்றும் தெரிவித்ததுடன் மேற்படி வவுனியா கூட்டத்தில் ஜனாதிபதியும் இதையே மேற்கோள் காட்டி உரையாற்றியதையும் நினைவுகூர்ந்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர் 'கடந்த காலங்களில் தெரிந்தோ, தெரியாமலோ அழிவுக்காக புலம்பெயர் சமூகத்தின் ஒருசரார் உதவிபுரிந்திருந்தனர். இனி எதிர்காலங்களில் எமது மக்களின் அபிவிருத்திக்காகவும், ஆக்கத்திற்காகவும் இவர்கள் உதவி ஒத்தாசைகளைப் புரிய வேண்டுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் நாம் எதிர்ப்பரசியலை விடுத்து, இணக்க அரசியல் மூலம் மக்களுக்கு சேவையாற்றி வருகின்றோம். அதிலும் அரசியலுக்காக நாம் ஒருபோதும் மக்கள் பணி செய்யவில்லை என்பதுடன் மக்களுக்கு உதவுவதே எமது நோக்கமாகும்.

நன்றிக்காகவும், அரசியல் சுயலாபத்திற்காகவும் நாம் அரசியலில் பங்கெடுக்கவில்லை. மக்களது சுபீட்சமான எதிர்காலத்திற் காகவும், வளமான வாழ்வுக்காகவுமே எமது அரசியல் பணி தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இன்றுள்ள சுமூகமானதொரு சூழ்நிலைக்கு தமிழ்ச் சமூகம் அளவுக்கதிகமான விலையைக் கொடுத்துள்ளது. இதனால் அவர்களது மீள்வாழ்வைக் கட்டியெழுப்ப வேண்டிய கட்டாய நிலை உருவாக்கப்பட்டுள்ளது' என்றார்.

எப்போது, எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்றிருந்த ஒரு பதட்டமான சூழ்நிலையை அகற்றி இன்று சுமுகமானதொரு சூழ்நிலையை உருவாக்கித் தந்துள்ள ஜனாதிபதிக்கும் பாதுகாப்புச் செயலர் உட்பட உரிய அனைவருக்கும் தனது நன்றி கூறுவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

 அத்துடன் பச்சிலைப்பள்ளி மேற்கு பிரதேச மக்களது மீள்குடியமர்வு, அவர்களது கோரிக்கைகள், தேவைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக அடுத்த மாதம் 7ஆம் திகதி உயர்மட்ட மாநாடொன்றை நடத்துவது என்றும், அதன்போது மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் அபிவிருத்தி தொடர்பாக விரிவாக ஆராயப்படுமெனவும் கூறினார்.

 குறிப்பிட்ட பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட முகமாலை, கிளாலி, இத்தாவில், இந்திரபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள மிதிவெடிகளை அகற்றி அப்பகுதியில் மக்கள் மீள்குடியமர்வதற்கு இன்னும் சில காலம் செல்லும் எனவும் அதுவரையில் பொறுமையாக இருக்குமாறும் மக்களைக் கேட்டுக் கொண்டார்.

அத்துடன் மக்களின் கோரிக்கைக்கு அமைவாக ஆண்கள், பெண்களுக்காக 50 துவிச்சக்கர வண்டிகள் எதிர்வரும் 07ம் திகதி வழங்கப்படுமெனவும் ஏனைய கோரிக்கைகள் தேவைகள் தொடர்பில் உயர்மட்ட மாநாட்டில் முடிவெடுக்கப்படுமென்றும் யாருக்கும் பயப்படாத சுதந்திரமாக வாழக் கூடிய சூழல் உருவாக்கப்பட வேண்டுமென்பதே தமதும் ஜனாதிபதியின் விருப்பமென்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.

இதன்போது பிரதேச செயலாளர் முகுந்தன் கருத்துத் தெரிவிக்கையில் 'யாழ்ப்பாணத்தில் 1995ம் ஆண்டு முதல் இன்றுவரை மக்களது பிரச்சினைகளையும், தேவைகளையும், இனங்கண்டு தீர்த்து வைத்து வருகின்றவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே. குறிப்பாக தீவக மக்களின் நலன்சார் விடயங்களிலும் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்த அமைச்சர் இன்று மீள்குடியேறி வரும் மக்களது அபிவிருத்திசார் விடயங்களிலும்; மிகுந்த அக்கறையுடனும் கரிசனையுடனும் ஆக்கபூர்வமான உதவிகளையும், ஒத்தாசைகளையும் வழங்கி வருகின்றார்' என்று கூறினார்.

 யாழ். பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் மோகனதாஸ் தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் யாழ் மாவட்ட ஈ.பி.டி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்டின் உதயன், பிரதேச இராணுவப் பொறுப்பதிகாரி கேணல் கீத்சிறி, பிரதேச செயலக, பிரதேச சபை அதிகாரிகள், வடமாகாண தென்னை அபிவிருத்திச் சபை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

 

-

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .