2020 நவம்பர் 28, சனிக்கிழமை

வடமராட்சி கிழக்கு மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல்

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 27 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக பிரிவில் மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் சகல அரச திணைக்களத் தலைவர்கள், பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களை உள்ளடக்கிய அபிவிருத்தி மேம்பாட்டுக் கூட்டமொன்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

கடந்த மாதம் இருபதாம் திகதி இடம்பெற்ற பொதுக்கூட்டத்தின் தொடர்ச்சியாகவும் அதன் மீளாய்வுக் கூட்டமாகவும் இன்றுமாலை மருதங்கேணி பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்ற மேற்படி கூட்டத்தில் மீளக்குடியேறும் மக்களின் அத்தியாவசிய தேவைகள் மற்றும் துறைசார் பிரச்சினைகள் தனித்தனியாக விரிவாக ஆராயப்பட்டன.

குறிப்பாக கடற்றொழில், விவசாயம், ஏனைய வாழ்வாதாரத் தொழில்கள், வீதி அபிவிருத்தி, போக்குவரத்துச் சேவை, வீடுகள் அமைத்தல், கிணறுகள் சுத்தம் செய்தல், கல்வி நடவடிக்கைகள், சுகாதாரம், கால்நடை வளர்ப்பு, தபால்சேவை, பலநோக்குக் கூட்டுறவுச் சங்க நடவடிக்கைகள், சனசமூக நிலையங்கள், விளையாட்டுத்துறை அபிவிருத்தி உட்பட ஏனையதுறைசார் விடயங்களும் விரிவாக ஆராயப்பட்டன.

வடமராட்சி கிழக்கு பிரதேச மக்களின் பிரதான வாழ்வாதார தொழிலான கடற்றொழில் குறித்து ஆராயப்பட்ட சமயம் கருத்துத் தெரிவித்த பிரதேச படைகளின் கட்டளை அதிகாரியான கேணல் ஜெயத்திலக்க, இப்பகுதியை தாம் புலிகளிடமிருந்து மீட்டெடுத்தபோது ஒருதொகை மீன்பிடி படகுகளை கண்டெடுத்து தமது பாதுகாப்பில் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.  

இவ்விடயத்தில் உரிமையாளர்களினால் இனங்காணப்பட்ட படகுகளை உடனடியாகவே உரிமையாளர்களிடம் கையளிப்பதெனவும் ஏனைய படகுகள் தொடர்பில் சங்கங்களிடம் கையளித்து உரிமையாளர்களிடம் ஒப்படைக்கலாம் என அபிப்பிராயம் தெரிவிக்கப்பட்டது. கடற்றொழிலுக்கு மேலாக மற்றைய பிரதான வாழ்வாதார தொழிலான விவசாயம் ஏனைய வாழ்வாதார தொழில்களான சீவல், சிகை அலங்காரம், சலவைத்தொழில் போன்றவற்றை ஆரம்பிப்பதற்கும் தேவையான உதவிகளை பெற்றுத்தருவது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

விவசாய நடவடிக்கைகளில் பெரும்போகத்திற்கான விதைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தல் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் பிரதேசத்தில் கட்டாக்காலிகளாகத் திரியும் மாடுகளைப் பிடித்து அவற்றை மீளக்குடியேறும் மக்கள் வளர்ப்பதற்கென கையளிப்பதுடன் இதற்கு படைத்தரப்பினரினது ஒத்துழைப்பினையும் பெற்றுக்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டபோது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் போக்குவரத்தினை மேற்கொள்ள உடனடி பணிப்புரைகளை வழங்கிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாணவர்களுக்கு முட்டையுடன் கூடிய சத்துணவு வழங்கப்படுவதை உறுதிப்படுத்தினார். அத்துடன் வடமராட்சி கிழக்கில் தொண்டராசிரியர்களாக பணிபுரிந்தோருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் முகமாக தாம் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றினை சமர்ப்பிக்க இருப்பதாக தெரிவித்த அமைச்சர், தொண்டராசிரியர்களின் பெயர்கள் மற்றும் சேவை விபரங்களை உறுதிப்படுத்துமாறும் மேலதிக மற்றும் வலயக்கல்விப் பணிப்பாளர்களுக்கு உரிய பணிப்புரைகளையும் வழங்கினார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் யாழ்.அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் கணேசமூர்த்தி, கமத்தொழில் சேவைகள் பிரதிப்பணிப்பாளர் பற்றிக் றஞ்சன், விவசாயத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் சிவகுமார், சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி கேதீஸ்வரன், கடற்றொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளர் தர்மலிங்கம், கூட்டுறவு உதவி ஆணையாளர் அருந்தவநாதன், மேலதிக கல்விப் பணிப்பாளர் வே.தி.செல்வரட்ணம், வடமராட்சி கல்விப் பணிப்பாளர் செல்வராஜா, பிரதேச கட்டளை அதிகாரி கேணல் ஜெயதிலக, பருத்தித்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி, யாழ். மாவட்ட திட்டப்பணிப்பாளர் பிரதீபன், பருத்தித்துறை பிரதேச சபைச் செயலாளர் ச.சந்திரயோகன், வடமராட்சி கிழக்கு கடற்றொழில் சமாசத்தலைவர் சிவசாமி, வீதி அபிவிருத்தி அதிகாரசபை நிறைவேற்று பொறியியலாளர் ராதாகிருஷ்ணன், வீதி அபிவிருத்தி திணைக்கள நிறைவேற்று பொறியியலாளர் திருச்செல்வம், இலங்கை போக்குவரத்துச் சபை பிரதேச முகாமையாளர் எஸ்.யோகநாதன், வடமராட்சி ஈ.பி.டி.பி. அமைப்பாளர் ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் ஆகியோர் உட்பட ஏனைய அரசாங்க திணைக்கள மற்றும் சபைகளின் உயரதிகாரிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பெருந்தொகையானோர் இக்கூட்டத்தில் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .