2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

யாழில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துதல் தொடர்பான மாநாடு

Menaka Mookandi   / 2011 நவம்பர் 30 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாவட்ட புகைப்பொருள் கட்டுப்பாட்டு குழுவின் சமகால புகைப்பொருள் மதுசாரம் மற்றும் போதைப் பொருள் பாவனையை கட்டப்படுத்துதல் தொடர்பான மாநாடு இன்று புதன்கிழமை யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் சமுதாய நலத்துறையினர், கல்வித் திணைக்களம், மாவட்ட மதுவரித் திணைக்களம் மற்றும் பொலிஸ் திணைக்களத்தைச் சார்ந்த முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இதில் முக்கியமாக மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள புகைப்பொருள், மதுசாரம் மற்றும் போதைப் பொருள் பாவனையை கட்டப்படுத்துதல் தொடர்பாக ஆராயப்பட்டது. இதன்போது பாடசாலைகள், சமூகம் மற்றும் கிராமிய மட்டங்களில் விசேட விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை சுகாதார அதிகாரி பிரிவு ரீதியாக நடைமுறைப்படுத்த முடிவெடுக்கப்பட்டது.

முக்கியமாக பாடசாலை மட்டத்தில் கல்வித் திணைக்களத்தின் முன்னெடுப்பில் புகைப்பொருள் மதுசாரம் மற்றும் போதைப் பொருள் பாவனைக்கெதிரான மாணவர் குழுக்களை அமைத்து மாணவர்கள் மூலமாக சக மாணவர்களுக்கு அறிவூட்டும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறும் அதற்கான மாணவர் வழிப்படுத்துனர்களை பயிற்றுவிப்பதற்கான அனுசரணையை சுகாதாரத் திணைக்களம் வழங்குமெனவும் தீர்மானிக்கப்பட்டது. இதற்கு பாடசாலைகள், பிள்ளைகள் மீதான பெற்றோரின் பங்களிப்பும் ஊக்கமும் அவசியமானது என தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் தாமாகவே புகையிலை உற்பத்திப் பொருட்களான சிகரட், பீடி, சுருட்டு மற்றும் போதையூட்டக்கூடிய பாக்கு வகைகள், லேகியம் பேன்றவற்றை விற்பனை செய்வதை தமது வாடிக்கையாளர் நலன் கருதியும் சமூக நலனைக் கருத்திற் கொண்டும் நிறுத்திக் கொண்ட பல்பொருள் விற்பனையாளர்கள், உணவக உரிமையாளர்கள் போன்ற வர்த்தகப் பெருமக்களை சுகாதார அதிகாரி பிரிவு ரீதியாக தெரிவு செய்து பாராட்டிதழ் வழங்கிக் கௌரவிக்கும் நிகழ்வொன்றும் எதிர்வரும் 12ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மற்றும் ஏற்கனவே சட்டமாக்கப்பட்டுள்ள 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு புகையிலை உற்பத்திப் பொருட்களான சிகரட், பீடி, சுருட்டு போன்றவற்றை விற்பனை செய்வதை இறுக்கமாக கண்காணித்து கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பற்றியும் இதன்போது ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .