2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

ஆளணி பற்றாக்குறையால் பொதுமக்களுக்கு சிறந்த சேவையாற்றுவதில் சிரமம்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 17 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் நிலவும் ஆளணி பற்றாக்குறை நீண்ட காலமாக நிரப்பப்படாதுள்ளமையால் பொதுமக்களுக்குரிய சேவையை பிரதேச சபை செய்வதற்கு பாரியளவில் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

'உள்ளூராட்சி மன்றத்தினால் ஆளணி மீளாய்வு இடம்பெறுவதால் நியமனங்கள் எவையும் மேற்கொள்ளப்படலாகாது என்ற சுற்றறிக்கை அனுப்பப்பட்டு ஒன்றரை வருட காலத்துக்கு மேலாகின்றது. தமக்கு நிரந்தர நியமனம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஐந்து ஆறு வருடங்களுக்கு மேலாக உளரீதியான பாதிப்புக்களுடனும் அட்டவணைப்படுத்தப்படாத பதவியணியைச் சேர்ந்த ஊழியர்கள் வேறு வழியின்றியும் கடமையாற்றுகின்றனர்.

இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகி தங்கள் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாது என்றெண்ணி பல ஊழியர்கள் கடமையிலிருந்து விலகி சுய தொழில் முயற்சியிலும் தனியார் நிறுவனங்களிலும் பணிபுரிகின்றனர்.

பிரதேச சபைகள் தாபிக்கப்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்ட ஆளணியினரே இன்று வரை அதிகரித்த தேவைகளின் மத்தியில் கடமையாற்றி வருகின்றனர். இதனால் பொது மக்களின் அன்றாட சுகாதாரப் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்க முடியாமலும் பல்வேறுபட்ட விமர்சனங்களுக்கும் விசனங்களுக்கும் பிரதேச சபைகள் உள்ளாகின்றன.

குறித்த பதவியொன்றில் அமைய அடிப்படையிலும் வெளிவாரி அடிப்படையிலும் நியமிக்கப்பட்ட ஊழியர்கள் மேலதிகாரிகள் பணிக்கும் அனைத்துக் கடமைகளையும் ஆற்ற வேண்டிய நிலையிலுள்ளனர். குறிப்பாக எமது பிரதேச சபையில் தற்காலிகமாக, வெளிவாரியாகவும் நியமிக்கப்பட்ட சுகாதாரத் தொழிலாளிகள், வேலைத்தொழிலாளிகள் போன்றோர் சாரதியாகவும் காவலாளிகளாகவும் அலுவலகப் பணியாளராகவும் நூலகத் தொழிலாளியாகவும் பதிற்கடமையாற்றுகின்றனர்.

இதனால் அவரவர்க்குரிய பணிகள் தாமதமடைகின்றன. அல்லது தேக்கமடைகின்றன. இதனால் பொது மக்கள் பல்வேறு விதமான அசௌகரியங்களுக்கு ஆளாவதுடன் பிரதேச சபையும் விமர்சனங்களுக்கு உள்ளாகின்றது. ஆளணி நியமனம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடிதங்கள் பல அனுப்பப்பட்டும் இன்றுவரை சாதகமான பதில் எவையும் கிடைக்கப்பெறவில்லை.

டெங்கு நோய் பரவுதலைக் கட்டுப்படுத்துவதற்காகவும் எமது பிரதேச சபையின் தூய்மையையும் பேணுவதற்காகவும் வெளிவாரி அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆளணியினர்க்குகூட பலமுறை கோரியும் அங்கீகாரம் வழங்கப்படவில்லை.

அவர்களைக்கூட நிறுத்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் பிரதேச சபை காணப்படுகின்றது. வெற்றிடங்கள் நிரப்பப்படுமாயின் இவர்களுக்கு சபைநிதியில் வழங்கப்படும் சம்பளம் மீதமாவதுடன் இந்நிதி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும்.

எனவே உள்ளுராட்சி மன்றங்களின் வினைத்திறனான சேவையை அதிகரிப்பதற்கும் நீண்டகாலமாக நிரந்தர நியமனம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ஊழியர்களின் நெடுநாள் கனவு பலிப்பதற்கும் உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றேன்.

பலத்த எதிர்பார்ப்புக்ககுடன் வாக்களித்து உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சி அதிகாரத்தை எமக்கு கையளித்த மக்களின் நியாயமான எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்த்து சிறந்த உள்ளுராட்சி மன்றமாக விளங்குவதற்கும் ஊழியர்களின் வாழ்வில் ஒளியேற்றுவதற்கும் நிரந்தர நியமனம் வழங்குதல் தொடர்பில் உரிய அதிகாரிகள் விரைவானதும் காத்திரமானதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .