2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

உரிமை போராட்டத்தில் அனைத்தையும் இழந்ததுடன் எதனையும் பெறவில்லை: கமலேந்திரன்

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 25 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா
 
தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்ட வரலாற்றில் இருந்தவற்றை இழந்தோமே தவிர எதையும் பெறவில்லை என வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் தெரிவித்தார்.
 
இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற வடமாகாண சபையின் கன்னியமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
 
எமது மக்களின் அரசியல் உரிமைகளுக்காகவும், விடுதலைக்காகவும் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்த அத்தனை போராளிகளையும் பலியாகிப்போன எமது மக்களையும் நினைவில் வைத்துக்கொண்டு எனது கன்னியுரையினை நிகழ்த்துவதில் பெருமையடைகின்றேன்.
 
தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு கௌரவமான தீர்வொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு மாகாண சபை முறைமையை முழுமையாக அமுல்படுத்துவதை முதல் கட்டமாகவும், 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதை கட்டங் கட்டமாக நகர்த்தி தீர்வு நோக்கி முன்னேற வேண்டும்.
 
இலங்கை - இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்டபோது, புலிகளின் அறிவிப்புப்படி 651 புலிப் போராளிகளும் மிகக் குறைந்த மக்களுமே பலியாகி இருந்ததாக கூறப்பட்டது. இரு நாடுகளின் ஒப்பந்தம் எனும் அந்த வாய்ப்பை தமிழ் மக்கள் ஏற்று அரசியல் உரிமைக்கான போராட்ட வடிவத்தை நடைமுறை சாத்தியமான பாதையில் நகர்த்தி இருந்தால், 651ஆக இருந்த உயிரிழப்புக்கள் ஆயிரங்களாகவும், இலட்சங்களாகவும் அதிகரித்து இருக்காதுடன், ஈடு செய்ய முடியாத இழப்புக்களும் இங்கே நிகழ்ந்திருக்காது.
 
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த மாகாணமாகவும் பொலிஸ், காணி அதிகாரங்களும் இந்திய அரசின் பக்கபலமும் இந்தியாவின் உயர்தரமான உதவியும் தமிழ் மக்களுக்கு கிடைத்த அந்த பொற்காலத்தினை புலிகள் தூக்கி எறிந்ததுடன், பொறுப்பெடுத்தவர்கள் துஷ்பிரயோகம் செய்தார்கள்.  
 
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் மாகாண சபையிலிருந்து நாம் உரிமை இலக்கு நோக்கிய பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று கூறி வந்துள்ளோம். எமது நிலைப்பாட்டை மாறி மாறி வந்த இலங்கை ஜனாதிபதிகளிடமும் சர்வதேச சமூகத்திடமும் வலியுறுத்தியும் வந்துள்ளோம்.
 
எம்மோடு தம்மை அர்ப்பணித்துப் பணியாற்றிய சிறந்த புத்திஜீவிகளையும் இழந்துள்ளோம். அவர்களின் தியாகமும், எமது நம்பிக்கை மிகுந்த போராட்டமும் இன்று நனவாகியுள்ளது.
 
இந்த மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவராக இந்த மன்றில் எனது உரையினை ஆற்றிக்கொண்டிருந்தாலும் இந்த மாகாணசபை ஊடான ஆட்சியும் ஆளுமையும் எமது மக்களின் எதிர்கால நல்வாழ்வுக்கு வித்திடும் திட்டங்களை முன்மொழிய வேண்டும் என்றும் அத்தகைய பயனுள்ள திட்டங்களை ஆதரித்து தமிழ் மக்கள் பயன்பெறச் செய்யவேண்டும் என்ற நோக்கம் எனக்கு உண்டு.
 
நலிந்து போயுள்ள எமது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் எமது எதிர்கால இளைய சந்ததிகளின் நலன் காக்கவும் அவர்களுக்கான முன்னேற்றப்பாதையினை வழிகாட்டிச் செல்லவும், சமூகத்தில் எதிர்காலம் குறித்த கேள்விகளோடு தனித்துவிடப்பட்டிருக்கும் தமிழ் இயக்கங்களின் முன்னாள் போராளிகளுக்கு தொழில்வாய்ப்பை ஏற்படுத்தவும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்குமான நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு எமது தோள்கள் மீது சுமைகளாக பாரப்படுத்தப்பட்டுள்ளது.
 
யுத்தத்தினால் உடல் மற்றும் உள ரீதியான பாதிப்புக்களுக்கு உட்பட்டுள்ளார்கள். அவர்களுக்கான உடல், உள நலன் சார்ந்த வழிகாட்டுதல்கள், சிகிச்சைமுறைகள், நலனோம்பும் செயற்பாடுகளை எமது சுகாதாரத்துறையினர் விரைந்து மேற்கொள்ளவேண்டும்.
 
இயற்கை வளம் செழித்த எம் பிரதேசங்களில் கைத்தொழில், விவசாயம், என்பவற்றை ஊக்குவித்து மக்களுக்கு வருமானத்தையும் வேலைவாய்ப்புக்களையும் உள்வாங்கும் நிலைகளைத் தோற்றுவிப்பதற்கும், உள்ளுர் உற்பத்தியை நவீன தொழில் நுட்பத்தின் உதவியுடன் பெருக்கவும், உற்பத்தித் தொழில்பேட்டைகளை நிறுவி ஏற்றுமதி தொழில் வாய்ப்பை எமது மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கவும் நாம் முன்னின்று உழைக்கவேண்டும்.
 
எமது மக்கள் தமது தொழில்களில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு ஏற்றவகையில் வங்கிகளின் செயற்பாடுகள் ஊடாக இலகு கடன்களை ஏற்படுத்திக் கொடுப்பதன் ஊடாக அவர்களது நடைமுறை வாழ்வுக்கான தொழிற்துறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதுடன் வேலைவாய்ப்புக்களையும் தோற்றுவிக்கலாம். இந்த வழிகள் நம் மக்களை சுபீட்சமான பாதைக்கு இட்டுச் செல்லும்.
 
கல்விக்குப் பெயர் பெற்ற வடபகுதி மக்கள் பல்வேறுபட்ட நெருக்கடியான சூழ்நிலைகளைக் கடந்து கல்வியில் பின் தங்கியுள்ளார்கள். இந்த நிலைமையை மாற்றி மீண்டும் கல்வியில் எமது முதல்தரத்தை நாம் ஏற்படுத்த வேண்டும். யுத்தத்தினால் எமது சிறார்கள் பலர் தம் கல்வியை முறையாகத் தொடர முடியவில்லை. பலர் பொருளாதார காரணங்களினாலும், யுத்தம் ஏற்படுத்திய இழப்புக்கள் காரணத்தினாலும் கல்வியை இடைநடுவே கைவிட்டுள்ளார்கள்.
 
கல்வியை மீண்டும் எமது இளைய சமுதாயத்தினர் பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக அவர்களுக்குரிய வழிகாட்டல்களையும் அதற்கான மூலவளங்களையும் வடமாகாண கல்வியமைச்சு வழங்குவதற்கான ஆயத்தநிலைகளை முதலமைச்சர் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.
 
நிரந்தரமானதும், கௌரவமானதுமான அரசியல் தீர்வு நோக்கிய பயணத்துக்கு வடமாகாண சபையை நாம் முன் நகர்த்திச் செல்ல வேண்டும். இந்த முயற்சியில் சகோதர முஸ்லிம் மக்களோடு இணக்கப்பாட்டை வலுப்படுத்திக் கொள்வதோடு, பெரும்பான்மை சிங்கள மக்களிடமும் எமது உரிமை கோரிக்கையின் நியாயங்களை தெளிவுபடுத்த நாம் உழைக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0

 • KB Saturday, 26 October 2013 11:50 PM

  நீங்கள் அதிகாரத்தில் இருந்த இவ்வளவு காலத்தில் நீங்கள் சொன்ன இவ்வளவையும் செய்திருக்கலாமே?

  Reply : 0       0

  சங்கே முழங்கு Friday, 25 October 2013 05:02 PM

  காட்டிக்கொடுப்புகள் இல்லாமல் இருந்திருந்தால் எம் உறவுகளின் இழப்புக்கு ஓர் அர்த்தம் கிடைத்திருக்கும்... ஆனால் தமிழனுக்குத்தான் அது கிடையாதே!!!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--